புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்க வேண்டாம்: க. பொன்முடி


சென்னை, அக. 25: தமிழதத்தில் 2011-ம் கல்வியாண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி மன்றத்தை (ஏ.ஐ.சி.டி.இ), தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறினார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள் என மொத்தமுள்ள 471 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் பி.இ. இடங்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஆக. 24) முடிவடைந்தது.
 கலந்தாய்வின் மூலம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 883 பேர் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றுள்ளனர். இது குறித்து அமைச்சர் பொன்முடி புதன்கிழமை அளித்த பேட்டி:அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 20 பி.இ. இடங்களுக்கு, 1 லட்சத்து 69 ஆயிரத்து 665 பேர் விண்ணப்பித்தனர்.
இதில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 234 பேர் தகுதியுடைய விண்ணப்பதாரர்களாக தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 68 ஆயிரத்து 222 மாணவர்கள், 43 ஆயிரத்து 661 மாணவிகள் என 1 லட்சத்து 11 ஆயிரத்து 883 பேர் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றுள்ளனர்.
 கலந்தாய்வில் அதிக மாணவர்கள் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டில் அரசு ஒதுக்கீட்டிலான பி.இ. இடங்களில் 30 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. ஆனால், நுழைவுத் தேர்வு ரத்து, முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து உள்ளிட்ட அறிவுப்புகளால் இந்த ஆண்டு நிரப்பப்படாத இடங்கள் 8 ஆயிரத்து 172-ஆக குறைந்துள்ளது.
மேலும், முதல் தலைமுறை பட்டதாரிகளாக 71 ஆயிரத்து 590 பேர் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 26 ஆயிரத்து 311 பேர் கூடுதலாகும்.
இதுபோல் கிராமப்புறங்களிலிருந்து பொறியியல் படிப்புகளில் சேர்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. 2005-ம் ஆண்டு 17 ஆயிரத்து 990-ஆக இருந்த பொறியியல் படிப்புகளில் சேரும் கிராமப்புற மாணவரின் எண்ணிக்கை 2010-ல் 76 ஆயிரத்து 73-ஆக உயர்ந்துள்ளது.
புதிய கல்லூரிகளை அனுமதிக்க வேண்டாம்...: இந்தியாவிலேயே பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளின் கீழ் 1.30 லட்சம் பேர் பொறியியல் படிப்புகளில் சேர்க்கப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டும்தான்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்தியாவில் பொறியியல் படிப்பு என்பது அவசியமாக கருதப்படுகிறது. பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெரும் 6 லட்சம் பேரில், 1.30 லட்சம் பேர்தான் பொறியியல் படிப்புகளில் சேருகின்றனர்.
எனவே, பொறியியல் கல்லூரிகளில் கற்பிக்கும் முறைகளிலோ அல்லது கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையிலோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இருந்தபோதும், 2011-ம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது என ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி வழங்குவதற்கு முன்பே கூடுதலாக 120 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஏ.ஐ.சி.டி.இ.-யின் அனுமதி உடனடியாக பெறப்படும்.
அதிக கட்டண வசூல் தொடர்பாக தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி மன்றம் 6 கல்லூரிகளில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்தக் கல்லூரிகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல் முதல் தலைமுறை மாணவர்களிடம் முழுக் கட்டணத்தையும் செலுத்துமாறு வலியுறுத்தும் கல்லூரிகள் தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

 

0 comments: