பசிபோக்கும் மக்கள் இலக்கியம் மணிமேகலை: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

மதுரை, ஆக. 30: பசி போக்கும் மக்கள் இலக்கியமாக மணிமேகலை திகழ்கிறது என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.

÷ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் 52-வது ஆண்டு விழாவில் நடைபெற்ற அமரர் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் நினைவு சொற்பொழிவு நிகழ்வில், மணிமேகலை மக்கள் இலக்கியம் எனும் பொருளில் அவர்
ஆற்றிய உரை:
÷சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை இரட்டைக் காப்பியங்கள்தான். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தொடர்ச்சியான சம்பவங்களைக் கொண்டிருப்பதாலும், சிலம்பில் கூறப்பட்ட சில செய்திகள் மணிமேகலையிலும் வருவதாலும் அவை இரட்டைக் காப்பியமாகத் திகழ்கின்றன.
÷ஆனால், அவை சமகாலத்து இலக்கியங்களா என்பதை ஆராய வேண்டும் என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறியதை கவனத்தில் கொள்வது அவசியமானது.
÷இப்போது தமிழ் கற்க வருவோர், தேர்வில் தேறினால் போதும் என்ற நிலையிலேயே வருகின்றனர். ஆய்வு நோக்கில் அவர்கள் தமிழைக் கற்பதில்லை. அதனால்தான் இதுபோன்ற ஆய்வுகளில் மாணவர்கள் அதிக நாட்டம் செலுத்துவதில்லை.
÷சிலம்பில் கூறப்படாத பல தகவல்கள் மணிமேகலையில் கூறப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. ஆசிரியப்பா கவிதை எழுத ஆசைப்படுவோர் மணிமேகலை படிக்க வேண்டும்.
÷தமிழ் இலக்கியத்தில் இலக்கிய மொழி, பேச்சு மொழி என இரு வகை உண்டு. நகைச்சுவை என்பது வழக்கு மொழியான பேச்சு மொழியில்தான் வரும். அத்தகைய பேச்சு மொழியை புரிந்துகொள்வதுபோல மணிமேகலையின் நடை அமைந்திருப்பதைக் காணலாம்.
÷மணிமேகலையில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது குறித்து குறிப்பிடப்படுகிறது. அதேபோல வறுமையைப் போக்க வேண்டும் என எழுதப்பட்ட முதல் காப்பியமாகவும் அது திகழ்கிறது. பட்டிமன்றம் என்ற சொல்லே மணிமேகலையில்தான் முதன்முதலில் காணப்படுகிறது.
÷மணிமேகலையில் அரசாட்சி பற்றிக் குறிப்பிடும்போது, மன்னன் செங்கோல் வளைந்தால், விண்ணில் கோள்கள் வளையும் எனக் கூறப்படுகிறது. அப்படி விண்கோள் வளைந்தால் நாட்டில் பஞ்சம் ஏற்படும். பஞ்சம், பட்டினி ஏற்பட்டால் மன்னன் ஆட்சி நிலைக்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது இன்றைக்கும், என்றைக்கும் பொருந்தும்.
÷சிலப்பதிகாரத்தின் சிறப்பு, அது சாமானியரைக் கதாபாத்திரங்களாக்கிய காப்பியம் என்பதுதான். கடவுளர்களையும், அரச குடும்பத்தினரையும் மையப்படுத்தாமல், வணிகர் குலத்தைச் சேர்ந்தவர்களைக் கதைத் தலைவனாகவும், தலைவியாகவும் கொண்ட சிலம்பு தனிப் பெருமை பெறுகிறது.
÷மணிமேகலை மேலும் ஒரு படி மேலே போய், கணிகை குலத்தைச் சேர்ந்த பெண்ணைக் காவியத் தலைவியாக்கி, பசியைப் போக்கும் உன்னதச் செயலை மனித நெறியாக்கி உயர்ந்து நிற்கிறது.
÷நிலையாமை, மறுபிறப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல கருத்துகளை எடுத்துக்கூறும் அற்புத இலக்கியமாக மணிமேகலை திகழ்கிறது. ÷காப்பியங்கள் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கும்போதுதான் அவை இறவாமல் இருக்கின்றன.
÷பசி போக்கும் மக்கள் இலக்கியமாக மணிமேகலை திகழ்கிறது. வந்தாரை வரவேற்று உணவு தரும் தமிழர் பண்பாட்டை வலியுறுத்தும் காப்பியமாகவும் மணிமேகலை திகழ்கிறது என்றார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
÷சமகாலத்து இலக்கியங்களா?  
நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியதாவது:
÷சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், அவை சமகாலத்து இலக்கியங்களா என்பதை தமிழறிஞர்கள் ஆராய்வது அவசியம்.
÷ஏனெனில், சிலப்பதிகாரத்தில் சீத்தலைச் சாத்தனார் அவையில் அமர்ந்திருக்க, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை அரங்கேற்றியதாகப் பாயிரத்தில் கூறப்பட்டுள்ளது.÷சிலப்பதிகாரத்தின்படி காவிரிப்பூம்பட்டினம் செல்வச் செழிப்போடு சோழ நாட்டின் பெருமைமிக்க வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
÷மணிமேகலையின் பாயிரத்திலும், இளங்கோவடிகள் முன்னிலை வகிக்க, மதுரை கூலவாணிகன் சாத்தன் அந்த நூலை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது.
÷மணிமேகலைப்படி பூம்புகார்ப் பட்டினத்தைக் கடல்கோள் கொண்டுவிட்டதாகக் குறிப்பு காணப்படுகிறது.
÷கடல்கோள் கொண்டதற்கு முன்னால் உள்ள காப்பியமாக சிலப்பதிகாரமும், புகார் நகரம் கடல் கொண்ட பிறகு எழுதப்பட்ட காப்பியமாக மணிமேகலையும் இருக்கும்போது, அவை நிச்சயமாக ஒரே நேரத்தில் எழுதப்பட்டவை அல்ல.
÷சிலப்பதிகாரத்தின் பாயிரத்தில் குறிப்பிடப்படும் சாத்தனும், மணிமேகலை ஆசிரியர் சாத்தனும் வெவ்வேறு புலவர்களாக இருக்கக்கூடும்.
÷நான் தமிழறிஞனல்ல. இலக்கிய ரசிகன் மட்டுமே. ஒன்பது உலகத் தமிழ் மாநாடு நடத்திவிட்டோம். ஓர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடத்திவிட்டோம். பல பல்கலைக்கழகங்களில் பல்வேறு ஆய்வுகள் நடத்திவிட்டோம். ஐயம் திரிபுற சிலம்பும் மேகலையும் வெவ்வேறு காலத்தவையா இல்லையா என்று இன்னும் தெளிவுபடுத்தாமல் இருக்கிறோமே, ஏன் என்பதுதான் எனது கேள்வி.
÷வயிற்றுக்குச் சோறிடல்வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என பாரதி கூறினான். இதை மணிமேகலை காவியமாக வலியுறுத்தி இருக்கிறது. பசியைப் போக்குவதுதான் தலைசிறந்த அறம் என்று இந்திய சமுதாயமும் தொன்றுதொட்டு வலியுறுத்தி வருவதற்கு மணிமேகலை ஒன்றுபோதும் சான்று பகர என்றார் அவர்.

 

0 comments: