செப்டம்பர் 6 முதல் சித்த மருத்துவ படிப்பு கலந்தாய்வு

சென்னை, ஆக.26: சித்த-ஆயுர்வேதம்-யுனானி-ஹோமியோபதி-இயற்கை மருத்துவ பட்டப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க சென்னையில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), பிஏஎம்எஸ் (ஆயுர்வேத மருத்துவம்), பியுஎம்எஸ்  (யுனானி மருத்துவம்), பிஎன்ஒய்எஸ் (இயற்கை மருத்துவம்-யோகா) ஆகிய பட்டப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க செப்டம்பர் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக் குழு அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும்.
இது தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை முதன்மைச் செயலர் ரமேஷ்குமார் கன்னா வெளியிட்டுள்ள அறிக்கை:-
""இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்க்க தரவரிசைப் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 192.75 தொடங்கி, மொத்தம் 971 மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க கலந்தாய்வு நடைபெறுகிறது. இதே போன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, இயற்கை மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, நாகர்கோயிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கும் இந்தக் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
சுயநிதி அரசு ஒதுக்கீடு: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சுயநிதி இந்திய மருத்துவ முறை மருத்துவக் கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்குக் கிடைக்கும் 69 சதவீத இடங்களுக்கும் இந்தக் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
கட்டணம் எவ்வளவு? முற்பகல் கலந்தாய்வுக்கு வர வேண்டிய மாணவர்கள் காலை 9 மணிக்கும், பிற்பகல் கலந்தாய்வுக்கு வர வேண்டிய மாணவர்கள் மதியம் 1 மணிக்கும் கலந்தாய்வுக் கூடத்தில் இருக்க வேண்டும். இந்திய மருத்துவ முறை அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குக் கட்டணம் ரூ.5,000 மற்றும் கலந்தாய்வுக் கட்டணம் ரூ.500-க்கு வரைவுக் காசோலை எடுத்து வர வேண்டும். விண்ணப்ப தகவல் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ள பெயருக்கு வரைவுக் காசோலை எடுக்க வேண்டும்'' என்று ரமேஷ்குமார் கன்னா கூறியுள்ளார்.

இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை
நாள் கிழமை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி முதல்

6.9.10 (திங்கள்) அனைத்து சிறப்பு வகுப்பினர்களுக்கும் கட்-ஆஃப் 192.75 முதல் 175.50 வரை

7.9.10 (செவ்வாய்) கட்-ஆஃப் 175.25 முதல் கட்-ஆஃப் 162.00
162.05 வரை முதல் 151.00 வரை

8.9.10 (புதன்) கட்-ஆஃப் 150.75 முதல் கட்-ஆஃப் 141.25             
141.50 வரை 128.50 வரை

9.9.10 (வியாழன்) கட்-ஆஃப் 128.25 முதல் கட்-ஆஃப் 113.75                      
114.00 வரை முதல் 80.25 வரை

 

0 comments: