"குட்டீஸ்'களை கவரும் வெள்ளைப் புலிகுட்டிகள் : வரும் 29ம் தேதி முதல் பார்வைக்கு விட ஏற்பாடு

சென்னை : வண்டலூர் பூங்காவில், சமீபத்தில் பெண் வெள்ளைப் புலி ஈன்ற, மூன்று புலி குட்டிகள் வரும் 29ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு விடப்படுகிறது.

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், டில்லி உயிரியல் பூங்காவில் இருந்து பீஷ்மர், அனு என்ற ஒரு ஜோடி வெள்ளைப்புலிகள் கொண்டுவரப்பட்டன. முதல் முறையாக பெண் புலி அனு, கடந்த ஆண்டு மூன்று குட்டிகளை ஈன்றது. ஒரு குட்டி இறந்தது. மற்ற இரண்டு குட்டிகளுக்கு ஆகான்ஷா, நம்ரதா என பெயரிடப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன், இரண்டாவது முறையாக அனு, மூன்று குட்டிகளை ஈன்றது. தாய் புலியும், குட்டிகளும் தனி கூண்டில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. அனுவிற்கு சிறப்பு உணவுகள் வழங்கப்படுகிறது. மூன்று மாதங்கள் கழித்த பிறகே, இந்த குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படும் என அதிகாரிகள் கூறினர். குட்டிகள் ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்பாக உள்ளன. இதனால், புலி குட்டிகளை பொதுமக்களின் பார்வைக்கு விட பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வரும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, தாய் புலி அனுவுடன், மூன்று குட்டிகளும் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படுகின்றன.

பூங்கா இயக்குனர் ரெட்டி கூறுகையில்,"வரும் 29ம் தேதி, காலை 11.30 மணிக்கு அனுவும், அதன் குட்டிகளும் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படும். அதன்பின், புலி குட்டிகளுக்கு பெயர் வைப்பது குறித்து முடிவு செய்யப்படும். தொடர்மழை காரணமாக, பூங்காவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், குளிரில் இருந்து விலங்குகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குளிரில் தவித்த யானை குட்டிக்கு, தார்பாய் மூலம் குடில் அமைத்து பாதுகாத்து வருகிறோம். இதேபோல், மற்ற விலங்குகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.

 

0 comments: