ஆசிரியர்கள் "கட்' அடிக்க கூடாது;உயர் கல்வி மன்ற நிர்வாகி பேச்சு

காரைக்குடி: ""வகுப்புகளை புறக்கணிக்காமல், ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும்,'' என அழகப்பா பல்கலையில் நடந்த "கல்வித்தர மதிப்பீடு' கருத்தரங்கில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர் ராமசாமி பேசினார். தமிழ்நாடு மாநில கல்வி தணிக்கை மற்றும் தர மதிப்பீட்டு மன்றத்துடன் இணைந்து பல்கலையில் கருத்தரங்கு நடந்தது. பதிவாளர் செண்பகவல்லி வரவேற்றார். ராமசாமி பேசியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில், கல்லூரிகளில் 6,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முன் நன்றாக படிக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் புரிந்து கொள்ளமுடியும். உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. வகுப்புகளை ஆசிரியர்கள் புறக்கணிக்க கூடாது. ஒவ்வொரு துறைகளிலும் ஆசிரியர்கள் ஆய்வு பணிகள் மேற்கொண்டால், கல்வியின் தரம் உயரும், என்றார். உயர் கல்வித்துறை முதன்மை செயலர் கணேசன் பேசுகையில், "" கல்வி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர் திறனை பணியிடை பயிற்சிகளின் மூலம் உயத்துவதோடு, தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும்.  அறிவை வளர்ப்பதற்கான ஏற்ற சூழலை, மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும். ஆராய்ச்சியும், பயிற்றுவித்தலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் இருப்பதால், அவை ஒன்றை ஒன்று வளப்படுத்திக்கொள்கின்றன,'' என்றார். உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் பாஸ்கரன், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கற்பககுமாரவேல், பேராசிரியர் செல்வம், சென்னை எத்திராஜ் கல்லூரி முதல்வர் தவமணி, சிண்டிகேட் உறுப்பினர் காசிநாதன், தேர்வாணையர் மாணிக்கவாசகம், நிதி அலுவலர் ரவிசங்கர், கல்லூரி வளர்ச்சி குழு உறுப்பினர் குருமூர்த்தி, தொலைதூர கல்வி இயக்குனர் பாலச்சந்திரன் பங்கேற்றனர்.

 

0 comments: