பிறருக்குக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

காரைக்குடி,   பிறருக்குக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.

 சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவில், மதுரை கம்பன் கழக அறக்கட்டளை துணைத் தலைவர் கே. சங்கரசீத்தாராமனுக்கு அறமனச்செம்மல் எனும் பட்டத்தை வழங்கி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியது:
 இவ்விழா கடமைக்காக நடத்துவது அல்ல. உணர்வு தழுவிய விழாவாகும். சேவை, தன்னலமற்ற தொண்டுள்ளம் கொண்டவர் சங்கரசீத்தாராமன். இலக்கியத்தைக் காப்பதில் தனி இடத்தைப்பெற்றவர். இலக்கியத்தை போற்றி பாதுகாக்கும் பணிக்காக ஏராளமான பொருள் செலவிடுபவர்.
 தொண்டு செய்வோர் சமூகத்துக்கு மேலும் பல பணிகளைச் செய்வதற்கு உத்வேகம் அளிக்க, குருமகா சன்னிதானம் எழுந்தருளி போற்றி பாôட்டுவதுதான் இவ்விழா.
 ஒரு மரத்தைப் போன்று இன்னொரு மரம் இருப்பதில்லை. ஒரு மனிதரைப் போன்று இன்னொருவர் தொண்டு செய்ய முடியாது. இயற்கையின் போக்கு நான் வாழ்வதல்ல. நாம் வாழ்வதற்காக. நம்மிடம் இருப்பதை பிறருக்குத் தந்து உதவ வேண்டும். ஆனால், நம்மிடம் உள்ள பழக்கமெல்லாம் குறைகளையே கண்டு பழகியது. அதனால்தான், குறைகளைப் பார்த்த விழிகள் குறைகளையே கண்டு பழகும். விரும்தோம்பல் தமிழ் பண்பாட்டின் அடையாளம்.  கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்குத்தான் பலர் பல வழிகளைக் கடைபிடிப்பர். ஆனால், தனது உழைப்பால் கிடைத்த பணத்தால், பல உதவிகளை பிறருக்குத் தெரியாமல் சங்கரசீத்தாராமன் வழங்கி வருகிறார்.
 பிறருக்குக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்றார் பொன்னம்பல அடிகளார். விழாவில் மலேசிய இந்து சங்கம் சார்பாக பரஞ்ஜோதி, உலகத்திருக்குறள் பேரவைப் பொதுச்செயலர் ந. மணிமொழியன், மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசைசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 மதுரை கம்பன் கழக அறக்கட்டளை துணைத்தலைவர் கே. சங்கரசீத்தாராமன் ஏற்புரையாற்றினார்.  பேராசிரியர் சொ. சேதுபதி இணைப்புரையாற்றினார்.
  விழாவில், குன்றக்குடி திட்டக்குழுத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், கல்வியியல் கல்லூரிச் செயலாளர் எஸ். மோகன், பேராசிரியர் அய்க்கண், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் என்.எம். சாக்ளா, முன்னாள் எம்.எல்.ஏ அருணகிரி, புலவர் அ, பழநி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

0 comments: