கூடுதல் பென்ஷன் கேட்டு தாடி வளர்ப்பு 80 வயது ஓய்வு ஆசிரியர் "வினோத' சபதம்

மேட்டூர்: "கூடுதல் ஓய்வூதியம் கிடைத்தால் மட்டுமே தாடியை எடுப்பேன்' என,  80 வயது  ஓய்வு பெற்ற  ஆசிரியர் வினோத சபதம் எடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொப்பம்பட்டி பஞ்., கொப்பம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆண்டிமுத்து (80). சில ஆண்டுகளாக குடும்பத்தினர் எவ்வளவு வற்புறுத்தியும் கூடுதல் ஓய்வூதியம் கிடைத்தால் தான் தாடி எடுப்பேன் என ஆண்டிமுத்து சபதம் செய்துள்ளார்.

ஆண்டிமுத்து கூறியதாவது:கடந்த 1954ல் கொப்பம்புதூர் அரசு உதவிபெறும் துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். கடந்த 1955ம் ஆண்டு கொப்பம்புதூர் பள்ளி நடுநிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த பள்ளியில் நான் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்.காலப்போக்கில் கொப்பம்புதூர் பகுதி மாணவர்கள் படிப்பதற்காக அருகிலுள்ள மாதநாயக்கன்பட்டி, மேச்சேரி மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனர். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 1986ல் கொப்பம்புதூர் நடுநிலைபள்ளி மீண்டும் துவக்கபள்ளியாக தரம் குறைக்கப்பட்டது.

அதனால், தலைமை ஆசிரியரான என்னை மீண்டும் துவக்கபள்ளி ஆசிரியராக நியமித்தனர். ஒருமுறை பதவி உயர்வு வழங்க பின்பு தொடர்ந்து அதே ஊதியம் மட்டுமே வழங்க வேண்டும். மாறாக பதவி இறக்கம் செய்த பின்பு ஆசிரியருக்கான ஊதியமே வழங்கப்பட்டது.தலைமையாசிரியர் ஊதியம் வழங்க மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை செய்த போதிலும், அக்கவுண்ட் ஜெனரல் அலுவலக அதிகாரிகள் ஆசிரியருக்கான சம்பளம் மட்டுமே வழங்குமாறு உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து எனக்கு ஆசிரியருக்கான ஊதியமே வழங்கப்பட்டது. 1989ல் நான் ஓய்வு பெற்றேன். 21 ஆண்டாக எனக்கு ஆசிரியருக்கான ஓய்வூதியமே கிடைக்கிறது.

தலைமை ஆசிரியராக பணிபுரிந்ததால், அதற்கான கூடுதல் ஓய்வூதியம் வழங்ககோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனக்கு அரசு முறைப்படி கூடுதல் ஓய்வூதியம் வழங்கினால் மட்டுமே எனது தாடியை எடுப்பேன் என சபதம் செய்துள்ளேன். அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், இதுவரை என் சபதத்தில் இருந்து பின் வாங்கவில்லை, என்றார்

 

0 comments: