மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வுக்கு நிரந்தரத் தடை: திமுக வலியுறுத்தல்

சென்னை, ஆக. 24: கல்வி, வரிவிதிப்பு போன்ற துறைகளில் மாநில அரசின் உரிமைகளைப் பாதிக்காத அளவுக்கு மத்திய அரசின் அணுகுமுறைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. மருத்துவக்கல்வி நுழைவுத் தேர்வு  திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்து அறிவித்திட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
   திமுக எம்.பி.க்கள் கூட்டம் கட்சித் தலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மூன்று முக்கிய பிரச்னைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
    சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இதனால், சராசரி மனிதன் பயன்படுத்தும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி உயரும் என்றும், ஆடம்பரப் பொருள்களின் மீதான வரி குறையும் எனவும் கருதப்படுகிறது.
  மேலும், குறைந்த வருவாய் உடைய மக்கள் தொகை நிறைந்துள்ள நமது நாட்டில் புதிய வரிவிதிப்பு முறை பிற்போக்கானது எனக் கூறப்படுகிறது. பல்வேறு முனைகளிலும் வேறுபாடுகள் நிறைந்த இந்தியாவில் ஒரே மாதிரியான வரியை விதிப்பது என்பது பல இடர்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
   இந்தப் பிரச்னையில் அனைத்து மாநிலங்களின் பங்களிப்பும், ஜனநாயக ரீதியிலான விரிவான கலந்தாலோசனையும் தேவை என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதியிருந்தார். இவற்றுக்குப் பிறகு, ஒருமனதான ஒப்புதலின்றி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வது சாத்தியமாகாது என மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இது ஆறுதல் அளிக்கிறது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி. இந்த நிலையில், கல்வி, வரிவிதிப்பு போன்ற துறைகளில் மாநில அரசின் உரிமைகளைப் பாதிக்காத அளவுக்கு மத்திய அரசின் அணுகுமுறைகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
பொது நுழைவுத் தேர்வு:
  மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது குறித்து அனைத்து மாநில அரசுகளுடனும் விரிவான விவாதம் நடத்த இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
    முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையையொட்டி, உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்து தமிழகத்தில் சமூகநீதிக்குச் சேதம் ஏற்படாமல் மத்திய அரசு தடுத்துள்ளது. அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என்பதை நிரந்தரமாக ரத்து செய்து அறிவித்திட வேண்டும்.
 மந்த நிலையில் இலங்கை அரசு:
     இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. அதே நேரத்தில், இந்திய அரசின் கருத்துக்கு மாறாக இலங்கை அரசு இடம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்னையில் இன்னும் மந்த நிலையில் செயல்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு உரிய வழி காண வேண்டும் என திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  இந்தக் கூட்டத்தில், திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள், மாநில நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சுரேஷ்ராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

0 comments: