இந்திய டீன்-ஏஜ் வயதினருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு அதிகம்

புதுடில்லி : அமெரிக்க டீன்-ஏஜ் வயதினரை விட, இந்திய டீன்-ஏஜ் வயதினருக்கு அதிகளவில் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில், 2 முதல் 5 சதவீதம் வரையிலான வளர் இளம்பருவத்தினர் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை மிஞ்சும் வகையில், டில்லியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வளர் இளம் பருவத்தினர் 6.4 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மும்பையில், 2001ம் ஆண்டில், டாக்டர்களிடம் உயர் ரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை பெற வந்த வெளி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையாகும். மைசூரில் பள்ளி மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 0.2 சதவீதம் பிள்ளைகள் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இந்நிலையில், அண்மையில் 13 முதல் 19 வயது வரை உள்ள டீன்-ஏஜ் மாணவர்கள் 1,022 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 6.4 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 
இதன் காரணமாக இதயத்துடிப்பில் ஏற்படும் "சிஸ்டோலிக்' காரணமாக 2.7 சதவீதம் பேரும், "டயஸ்டோலிக்' காரணமாக 2 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டினாலும், 1.7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
டில்லி மருத்துவ ஆய்வுக் கழகம், ரூச்சிகா கோயல் பல்கலைக்கழகம், வட கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன. இந்த ஆய்வுக் கட்டுரை பிரிட்டிஷ் மருத்துவ இதழிலும் வெளிவந்துள்ளது.
இந்த ஆய்வுக்கு தலைமையேற்ற அனூப் மிஸ்ரா கூறியதாவது: பிள்ளைகளின் உடல் நலத்தில், பெற்றோர்கள் அதிக கவனத்துடனும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டுமென்பதை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்தியுள்ளது. டீன்-ஏஜ் வயதினருக்கு, பரம்பரையாகவும், இந்த உயர் ரத்த அழுத்த நோய் வருகிறது. 
மேலும், போதிய ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது, கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது, உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்ளாமை, மிகக் குறைவான உடல் உழைப்பு, உடற்பயிற்சி செய்யாமை உள்ளிட்ட காரணங்களால் டீன்-ஏஜ் வயதினருக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது.
ஆனால், இது அந்த பிள்ளைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ தெரிவதில்லை. உயர் ரத்த அழுத்த நோய் உள்ள பிள்ளைகளை கண்டு கொள்வதற்காக அறிகுறிகள் சில உள்ளன. அதாவது, தொடர்ந்து தலைவலியும், தலை சுற்றலும் ஏற்படும். பார்வை குறைபாடுகள் தோன்றும். கவனக்குறைவு அதிகமாக இருக்கும். படிப்பு, விளையாட்டு உள்ளிட்ட எதிலும் நாட்டம் இருக்காது. இத்தகைய அறிகுறிகள் தென்படும் பிள்ளைகளை உடனடியாக மருத்துவர்களிடம் அழைத்து செல்வது நல்லது.
உயர் ரத்த அழுத்தம் பின்னாளில், இதய நோய்கள், சிறுநீரக பாதிப்பு, நீரழிவு நோய் உள்ளிட்டவற்றுக்கு மூல காரணமாக அமைந்து விடும். எனவே, பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. இவ்வாறு அனூப் மிஸ்ரா கூறினார்.

 

0 comments: