தமிழ்வழி கல்வியில் படித்தவர்கள் பொறியியல் படிப்பில் சேருவது உயர்வு

சென்னை : பிளஸ் 2ல் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள், பொறியியல் படிப்பில் சேருவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.

பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து முடிந்துள்ளது. இக் கவுன்சிலிங்கிற்கு விண் ணப்பித்த ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 234 பேரில், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 883 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களில், 74 ஆயிரத்து 982 பேர்(45.38%) பிளஸ் 2வில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள்; 90 ஆயிரத்து 252 பேர்(54.62%) பிளஸ் 2வில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்கள். கவுன்சிலிங் மூலம் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களில் 54 ஆயிரத்து 460 பேர்(48.68%) பிளஸ் 2வில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள்; 57 ஆயிரத்து 423 பேர்(51.32%) பிளஸ் 2வில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்கள்.

கடந்த 2005ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பிளஸ் 2வில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த 32 ஆயிரத்து 288 பேரில், 8,506 பேர்(26.34%) பிளஸ் 2வில் தமிழ் கல்வியில் படித்தவர்கள்; 23 ஆயிரத்து 782 பேர்(73.66%) பிளஸ் 2வில் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்கள். பிளஸ் 2வில் தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்கள் 2005ம் ஆண்டில் 8,506 பேர் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு அம்மாணவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 460 பேராக உயர்ந்துள்ளது. பிளஸ் 2வில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள், பொறியியல் படிப்பில் சேருவது ஐந்து ஆண்டில் ஆறு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு பொறியியல் கவுன்சிலிங் மூலம் இடம் கிடைத்தவர்களில் 26.34 சதவீதம் பேர் மட்டுமே பிளஸ் 2வில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள். ஆனால், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங் மூலம் இடம் கிடைத்தவர்களில் 48.68 சதவீதம் பேர் பிளஸ் 2வில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள். பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ரத்து; முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு பொறியியல் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் ஆகிய அறிவிப்புகளால், தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவது அதிகரிக்க காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

 

0 comments: