மன அழுத்தமா? உங்களுக்கு விருப்பமானவற்றின் பக்கம் கவனத்தை திருப்புங்கள்

புதுடில்லி: மன அழுத்தத்தை விரட்ட, உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மன அழுத்தம் இளவயதினர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுகிறது. இதற்கு வாழ்க்கை முறை, வேலை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. 
மன அழுத்தம் காரணமாக, இரத்த அழுத்தம், அஜீரண கோளாறுகள், முடி கொட்டுதல், தோல் நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. மேலும், இதயம் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு நோய் போன்றவற்றிற்கும் மன அழுத்தம் மூல காரணமாக இருக்கிறது.

இது குறித்து மனநல மருத்துவர்கள் கூறியதாவது: ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தம் அவரது உடலை பாதிப்பதோடு அல்லாமல், மற்றவர்களின் மனதிலும், உறவு, நட்பு போன்றவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். இதனால், அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை வேறுவிதமாக மாறுகிறது. எனவே, மன அழுத்தத்தை விரட்டுவதற்கு, உங்களுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம், கவனத்தை திசை திருப்பி, மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

கலை நிகழ்ச்சிகள், சினிமா, நடன வகுப்புகள், இசை நிகழ்ச்சிகள், சமையல் வகுப்புகள் உள்ளிட்டவற்றுக்கு போவது, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவது, புத்தகம் படிப்பது, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது போன்ற நமக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடும் போது, மனதில் அமைதியும், மன நிறைவும் ஏற்படுகிறது. வேலைக்கு போவது, வீட்டிற்கு வருவது, சாப்பிடுவது, உறங்குவது, திரும்பவும் மறுநாள் காலை பரபரப்பாக அலுவலகத்திற்கு புறப்பட்டு ஓடுவது போன்றவற்றை இயந்திரத்தனமாக தொடர்ந்து செய்து வருவதால், மனதில் வெறுமை தோன்றுகிறது.  எனவே தான், பிழைப்புக்கான வேலையை தவிர நமக்குப் பிடித்தமான விளையாட்டு, இசை, சினிமா, இலக்கியம் போன்ற ஏதாவது ஒன்றில் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மருத்துவர்கள்  கூறினர்.

 

0 comments: