கொரியாவில் தேசிய ஓவிய கண்காட்சி : இடம்பிடித்தார் மார்த்தாண்டம் ஓவியர்

மார்த்தாண்டம் : கொரியா நாட்டில் நடக்கும் இன்டர்நேஷணல் ஓவிய கண்காட்சியில் கின்னசில் இடம் பிடித்த மார்த்தாண்டத்தை சேர்ந்த ஓவியர் ராஜசேகரனின் ஓவியங்கள் இடம்பெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ஓவியர் ராஜசேகரன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய பணியில் ஈடுபட்டு வருகிறார். நுணுக்கமான மற்றும் வித்தியாசமான ஓவியங்கள் தனது கைவண்ணத்தில் கலை அம்சத்துடன் உருவாக்கி பலரது பாராட்டை பெற்றுள்ளார்.
நெய்யாற்றின்கரையில் மா.கம்யூ., தலைவர் இ.எம்.எஸ்., நம்பூதிரிபாட் படத்தை வரைந்து கின்னசில் இடம் பிடித்தார். பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனுடன் கலை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். திரைப்பட கலை இயக்குனரும், கின்னஸ் சாதனையாளருமான ஓவியர் ராஜசேகரனின் ஓவியங்கள் கொரியா நாட்டில் நடக்கும் ஓவிய கண்காட்சியில் இடம்பெற உள்ளது.
கொரிய குடியரசின் ஒன்பதாவது நேஷ்ணல் லைப் லாங் லேணிங் பெஸ்டிவல் 2010ன் ஒரு பகுதியாக இன்டர்நேஷ்ணல் காண்டம்பரரி ஆர்ட் பெஸ்டிவல் வரும் அக்டோபர் 7 முதல் 11ம் தேதி வரை கொரியாவின் டாங்கு மாவட்டத்தில், டியேகு மெட்ரோ பொலிட்டன் நகரில் நடக்கிறது. உலக அளவில் 15 நாடுகளில் இருந்து 45 ஓவியர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் இருந்து மார்த்தாண்டத்தை சேர்ந்த ஓவியர் ராஜசேகரனும், வடஇந்தியாவில் இருந்து இருவரும் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். ஒரு ஓவியருக்கு இரு ஓவியங்கள் என மொத்தம் 90 ஓவியங்கள் இடம் பெறுகிறது. ஓவியர் ராஜசேகரனின் தி லுக், மதர் தெரசா படங்கள் இடம்பெற உள்ளன.
கின்னஸ் உலக சாதனையாளர்கள் கம்யூனிட்டி இணைய தளத்தின் உறுப்பினர்களில் ஓவியர் ராஜசேகரன் ரேட்டிங்களில் முதலிடத்திலும், அதிக புள்ளிகளில் மூன்றாவது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 comments: