தெரிந்து கொள்ளுங்கள்... 8 கிராண்ட்ஸ்லாம்களை வென்றவர்...





டென்னிஸில் எட்டு ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, உலக டென்னிஸ் அரங்கில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் இவான் லெண்டில்.
1960-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி செக் குடியரசில் பிறந்தார் இவான். பின்னர், அமெரிக்காவில் குடியேறி டென்னிஸ் விளையாட்டில் பெரும் புகழ் பெற்றார்.
அவரது பெற்றோரும் டென்னிஸ் வீரர்களாவர். 1978-ம் ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஜூனியர் போட்டிகளில் பட்டம் வென்று தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கினார்.
1981-ம் ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார். எனினும், ஜான் போர்க்கிடம் தோல்வி அடைந்தார்.
இவானின் கிராண்ட்ஸ்லாம் கனவு 1984-ம் ஆண்டு நனவானது. அந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் முன்னணி வீரர் ஜான் மெக்கென்ரோவை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார் இவான்.
அதற்கு அடுத்து, நடந்த மூன்று அமெரிக்க ஓபன் போட்டிகளில் தொடர்ச்சியாக பட்டம் வென்றார்.   
இரண்டு ஆஸ்திரேலிய ஓபன், மூன்று பிரெஞ்ச் ஓபன் பட்டங்கள், மூன்று அமெரிக்க ஓபன் என 8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார் இவான். எனினும், விம்பிள்டன் பட்டத்தை அவர் ஒரு முறை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தார் இவான். இச்சாதனையை 2009-ம் ஆண்டு ரோஜர் பெடரர் முறியடித்தார்.
தனது வெற்றிகளின் மூலம் 270 வாரங்கள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
இரட்டையர் பிரிவிலும் 6 பட்டங்களை இவான் கைப்பற்றியுள்ளார். இடையில் சிறது காலம் தனது கவனத்தை கோல்ப் விளையாட்டில் செலுத்தினார். கோல்ப் விளையாட்டில் சில பட்டங்களையும் வென்ற இவான், தனது மகள்களுக்கு கோல்ப் பயிற்சியாளராகவும் விளங்கினார்.
கடுமையான பயிற்சி, திட்டமிடல், அர்ப்பணிப்பு உணர்வு, அறிவியல் பூர்வமான அணுகுமுறை ஆகியவற்றால் டென்னிஸ் விளையாட்டில் என்றும் நினைவுகூறத்தக்கவராக விளங்குகிறார் இவான்.
தொடர்ச்சியான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த இவான், 1994-ம் ஆண்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர், சில காட்சி போட்டிகளில் கலந்துகொண்டு அவர் விளையாடினார்

 

0 comments: