தஞ்சை பெரிய கோயில் ஓவியங்கள் நூலாக வெளியிடப்படும்: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர்

தஞ்சாவூர், ஆக.  24: தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் கருவறைச் சுற்றில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூலிகைச் சாற்றைக் கொண்டு வரையப்பட்ட "பிரெஸ்கோ பெயின்டிங்' ஓவியங்கள் தொகுக்கப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் நூலாக வெளியிடப்படும் என்றார் துணைவேந்தர் ம. ராசேந்திரன்.
   தமிழ்ப் பல்கலைக்கழக அகராதியியல் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முனைவர் ச. மெய்யப்பன் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்குத் தலைமை வகித்து அவர் பேசியது:
 "ஆதி மனிதன் பொருள் பார்த்து அதற்கு சொல்லைத் தேடினான். நாம் சொல்லுக்கு பொருள் தேடுகிறோம். எழுத்து சொல்லாகி, தொடராகி பொருளைத் தருகிறது. சில வேளைகளில் எழுத்து சொல்லாகாமல், தொடராகாமல் பொருள் தருகிறது. அதுதான் ஓவியம்.
   பெருவுடையார் கோயிலில் உள்ள ஓவியங்கள் இதுவரை அச்சு வடிவில் வெளியாகவில்லை. இங்கு திருமுறை, இசை ஓவியமாக இருக்கிறது.
 கோயிலிலுள்ள ஓவியங்களைத் தொகுத்து அச்சிட்டு நூலாக வெளியிடலாம் என முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். உடனடியாக அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதை அடுத்து தமிழ்ப் பல்கலைக்கழகம் பெரிய கோயில் ஓவியங்களை அச்சிட்டு நூலாக வெளியிடுவதற்கான அனுமதியை நாம் பெற்றுள்ளோம்' என்றார் ராசேந்திரன்.
  செம்மொழி அகராதிகள் என்ற பொருளில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி முதன்மைப் பதிப்பாசிரியர் வ. செயதேவன் பேசியது:
  "உலகச் செம்மொழிகள் எனப்படுபவை தமிழ், சம்ஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், சீனம், ஹீபுரு, அரேபியம் ஆகிய 7 மொழிகளாகும். அகராதிக்கு அடிப்படையாக விளங்குவது தொல்காப்பிய உரியியல் ஆகும். அகராதிக் கூறுகள் உரியியலில்தான் காணப்படுகின்றன. உலகில் முதன்முதலில் தமிழில்தான் அகர வரிசையில் அகராதி உருவானது.  கிரேக்கத்தில் பலவகை அகராதிகள் தோற்றம் பெற்றன. ஆங்கிலத்துக்கெனத் தனி அகராதிகள் தோன்றவில்லை. ஆங்கிலத்துக்கு, பிற்காலத்தில்தான் அகராதி உருவானது. அகராதி என்பது வெறும் சொற்களின் தொகுப்பாக மட்டுமின்றி பொருளைக் கொடுப்பதாக பல்வேறு பரிமாணங்களில் காண முடிகிறது' என்றார் செயதேவன்

 

0 comments: