உப்பின்றி உண்டால் நீண்ட ஆயுள்

சென்னை : ""உணவில் உப்பை தவிர்த்தால் முதுமையில் வரும் நோய்களில் இருந்து விடுபடலாம்,'' என, பேராசிரியர் நந்தகோபாலன் தெரிவித்தார்.

"ப்ரோபஸ் கிளப் ஆப் சென்னை' ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாதாந்திர கூட்டம் சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் நடந்தது. கூட்டத்தில், "முதியோர் மற்றும் மனநலம்' என்ற தலைப்பில் பேராசிரியர் நந்தகோபாலன் பேசியதாவது:இன்றைய நவீன உலகில், அன்றாடம் நாம் உட்கொள்ளும் அனைத்து உணவு பொருட்களிலும் விஷத்தன்மை உள்ளது. உணவு பழக்கத்தால் தோல்வி பெற்று இருக்கிறோம். உணவு பழக்கவழக்க முறைகள் கூட முதியோர்களின் மனநிலையை பாதிக்கும். உணவுக்கும், எண்ண அலைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கிராமத்தில் வசிக்கும் பாமரனுக்கு, உணவு உட்கொள்வதில் இருக்கும் அடிப்படை அறிவு கூட நகரத்தில் வசிப்பவர்களிடையே இல்லை.உலகளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவில் உப்பை தவிர்த்தால், முதுமை காலத்தில் எதிர் கொள்ளும் நோய்களில் இருந்து முதியோர்கள் விடுபடலாம்.இவ்வாறு நந்தகோபாலன் பேசினார்.

கூட்டத்தில், ஓய்வு பெற்றோர் அமைப்பின் உறுப்பினர்களின் பிறந்த நாளை, அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்ததோடு, கேக் வெட்டியும் கொண்டாடினர். அமைப்பின் தலைவர் கிருஷ்ணராம் தவே, செயலர் சுப்புராஜ் மற்றும் ஆனந்த், முதியோர் இல்ல அறங்காவலர் பாகிரதி ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

0 comments: