சென்னை பல்கலை தேர்வு நடைமுறை மாற்றம் : முறைகேடுகளை தடுக்க அதிரடி நடவடிக்கை

சென்னை : ""சென்னை பல்கலைக்கழக தேர்வு மையங்களில், இனி தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே வினாத்தாள்கள் கொடுக்கப்படும்,'' என, சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழக தேர்வு நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதன்படி, தேர்வு மையங்கள் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். தேர்வு மையங்களில், இன்டர்நெட், பேக்ஸ், ஜெராக்ஸ் வசதிகள் இருக்க வேண்டும். இந்த வசதிகள் இல்லாவிட்டால் மைய அனுமதி தரப்படாது.
தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தான் வினாத்தாள்கள் தேர்வு மையத்தில் கொடுக்கப்படும். தேர்வு முடிந்தவுடன் அன்றைய தினமே, தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு பல்கலைக்கு கொண்டு வரப்படும்.
வினாத்தாள் மாறினால், ஆன்-லைனில் குறிப்பிட்ட பாடத்திற்கான வினாத்தாளை "பாஸ்வேர்டு' கொடுத்து எடுத்துக் கொள்ளலாம். மேலும் பேக்ஸ் மூலமாகவும் வினாத்தாள் அனுப்பப்படும். ஆன்-லைன், பேக்ஸ் மூலம் பெறப்படும் வினாத்தாள்களை ஜெராக்ஸ் செய்து மாணவர்களுக்கு வழங்க முடியும்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்களுக்கு மட்டுமே, தொலைதூரக் கல்வி மையத்தின் தேர்வு மைய அனுமதி வழங்கப்படும். தேர்வு மையத்தில், அக்கல்லூரியின் முதல்வர் தான் முதன்மை தேர்வு கண்காணிப்பாளராக செயல்பட வேண்டும். அவர் இல்லாத நேரத்தில், தனது சார்பாக மற்றொரு நபரை முதல்வர் நியமிக்க வேண்டும். ஆனால், முழு பொறுப்பையும் முதல்வர் ஏற்க வேண்டும்.
தேர்வுக் கூடத்திற்குள் மொபைல் போன் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படாது. மாணவர்கள் தேர்வுக் கூடத்திற்குள் நுழையும் முன் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். சென்னை பல்கலையில் 112 பாடத்திட்டக் குழுவில், 17 குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் புதிய பாடத்திட்டத்தை விரைவில் வழங்கும். அவை அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும்.
தொலைதூரக் கல்வி மையத்தில், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், பைனான்சியல் மேனேஜ்மென்ட், எச்.ஆர்., மேனேஜ்மென்ட், சிஸ்டம் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட 12 பிரிவுகளில் புதிதாக எம்.பி.ஏ., படிப்புகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலமாகவும் எம்.பி.ஏ., படிப்பு வழங்கப்படவுள்ளது.
நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்ட சிறுபான்மை கல்லூரி முதல்வர்களை, கல்விக் குழுவில் உறுப்பினர்களாக சேர்த்து கொள்வது தொடர்பாக மீண்டும் அரசு வக்கீலிடம் சட்ட ஆலோசனை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருவாசகம் கூறினார்.

 

0 comments: