கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்:மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

திருவள்ளூர்:"சந்திரயான் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியதால், நிலவில் நீர் உருவாகிறது என்பதை கண்டறிந்தோம். அதே போன்று, மாணவர்களாகிய நீங்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் சாதிக்க முடியும்' என, சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ்., பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, கும்மிடிப்பூண்டி செந்தமிழ்ச்சோலையின் நிறுவனர் பேராசிரியர் விஜயரங்கன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.கல்லூரி தலைவர் கோவிந்தராஜன், நிர்வாக இயக்குனர் மற்றும் செயலர் ஆறுமுகம், துணைத் தலைவர் தேசமுத்து, இயக்குனர்கள் பழனி, விஜயகுமார், கபிலன், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் விஜயகுமார் வரவேற்றார்.விழாவில், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியபோது, "இக்கல்லூரி தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், குறுகிய காலத்தில் படிப்பு மட்டுமின்றி மற்ற துறைகளிலும் பல சாதனைகள் படைத்து சிறந்து விளங்குகிறது.சந்திரயானுக்கு முன் நிலவுக்கு 69 விண்கலங்களை உலக நாடுகள் செலுத்தி ஆய்வு நடத்தின. 11 சாதனங்களைக் கொண்டு 70வது விண்கலமாக நிலவில் ஆய்வு நடத்த சந்திரயான் சென்றது. நிலவில் நீர் இருப்பது மட்டுமின்றி, நிலவில் நீர் உருவாகிறது என்பதை சந்திரயான் மூலம் உலகிற்கு, இந்தியா தெளிவுபடுத்தியது.

சந்திரயான் மூலம் இந்தியா எங்களுக்கு அளித்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் நிலவில் நீர் உருவாகிறது என்பதை கண்டறிந்து முதல் முயற்சியில் வென்றோம். இன்றைய இந்தியா, சந்திரயானுக்கு பிறகு மாற்றம் கண்டுள்ளது.மாணவர்களாகிய உங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சாதிக்க வேண்டும் என்பதற்கு சந்திரயான் சிறந்த உதாரணம். கிராமப்புறங்களில் இருந்து தமிழ் வழிக் கல்வி பயின்ற ஏராளமான மாணவர்கள் இங்கு பயின்று வருவதை கேட்டறிந்தேன்.

 

0 comments: