கெளரவ டாக்டர் பட்டம்: ஆனந்திடம் மன்னிப்பு கேட்டார் கபில் சிபல்


புதுதில்லி, ஆக. 24: ஹைதராபாதில் நடைபெற்ற சர்வதேச கணிதவியல் மாநாட்டின்போது கெளரவ டாக்டர் பட்டம் மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடம் செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கேட்டார் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல்.
அவரிடம் பேசியதையடுத்து அந்த பட்டத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக ஆனந்த் தெரிவித்தார் என்றார் கபில் சிபல்.
சென்னையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். ஸ்பெயின் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள அவர் சில ஆண்டுகளாக அங்கு குடியிருந்து வருகிறார். அவருக்கு இந்திய பாஸ்போர்ட்டும் உள்ளது.
ஹைதராபாதில் நடைபெறும் சர்வதேச கணிதவியல் மாநாட்டின்போது விஸ்வநாதன் ஆனந்துக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழக கணித மேதை டேவிட் மம்போர்டுக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது என மாநாடு ஏற்பாட்டுக்குழு முடிவு செய்து அது தொடர்பான தகவலை ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு முறைப்படி தெரிவித்துவிட்டது. இது பற்றி அனுமதி கேட்டு மத்திய அரசுக்கும் பல்கலைக்கழகம் கடிதம் எழுதியிருந்தது. இந்த இருவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் திங்கள்கிழமை வழங்கப்பட இருந்தது. அதற்காக ஞாயிற்றுக்கிழமையே ஹைதராபாத் வந்துவிட்டார் விஸ்வநாதன் ஆனந்த். தவிர செவ்வாய்க்கிழமை அன்று மற்றவர்களுடன் அவர் செஸ் ஆட்டத்தில் பங்கேற்பார் எனவும் நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் விஸ்வநாதன் ஆனந்துக்கும் மம்போர்டுக்கும் திங்கள்கிழமை அந்த பட்டம் வழங்கப்படவில்லை.
விஸ்வநாதன் இந்திய நாட்டவரா? ஸ்பெயின் பிரஜையா என மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் கேள்வி எழுப்பியதால் அவருக்கு பட்டம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, கபில் சிபல் தொலைபேசியில் தொடர்புகொண்டு விஸ்வநாதன் ஆனந்திடம் பேசி நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.
இன்றே கெளரவ டாக்டர் பட்டம் வழங்க தயாராக இருப்பதையும் தெரிவித்தேன். இருப்பினும், ஏற்கெனவே திட்டமிட்ட சில பணிகள் காரணமாக இப்போதைக்கு முடியாது என்றும், தமக்கு சாதகமான நேரத்தில் பட்டம் பெறுவதாகவும் ஒப்புக்கொண்டுவிட்டார் விஸ்வநாதன் ஆனந்த் என்று நிருபர்களிடம் கபில் சிபல் தில்லியில் தெரிவித்தார்.
விஸ்வநாதன் ஆனந்த் எந்த நாட்டவர் என்கிற சந்தேகத்தை மத்திய மனித ஆற்றல் அமைச்சகம் எழுப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளது பற்றி கேட்டதற்கு அது பற்றிய கேள்வியே எழவில்லை. அவர் எந்த நாட்டவர் என்பதில் கேள்விக்கு இடமே இல்லை. ஆனந்தின் பெயர் இடம்பெற்ற ஆவணத்துக்கு மே 22ம் தேதியே ஒப்புதல் கொடுத்துவிட்டேன். அந்த ஆவணத்தில் மேலும் 5 பேரின் பெயர்களும் இருந்தன.
இந்நிலையில் ஒரு நபரைப்பற்றி குறிப்பிட்டு அந்த ஆவணம் வந்தது. அதற்குள்ளாக பல்கலைக்கழக நிகழ்ச்சி முடிந்துவிட்டது. ஒரு வெளி நாட்டவரை பற்றி கேள்வி எழுந்தபோதுதான் இந்த பிரச்னையே உருவானது. முன்னரே தெரிந்திருந்தால் நான் அப்போதே முடிவு எடுத்திருப்பேன்.
மிக விரைவாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்க எடுத்தோம். இனி முடிவெடுக்க வேண்டியது விஸ்வநாதன் ஆனந்த் தான்.
அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். அவரும் அதை ஏற்கத் தயாராக இருக்கிறார்.
நடைமுறை விதிகளால் அவருக்கு அந்த பட்டம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதை உடனடியாக நிவர்த்தி செய்து விட்டோம். நடந்த சம்பவத்துக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்து விட்டேன் என்றார் கபில் சிபல்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவரல்லவா விஸ்வநாதன் ஆனந்த். இவ்வாறு உலக அளவில் சாதனை படைப்பவர்களால் நமது நாட்டுக்கு அல்லவா பெருமை என்றார் கபில் சிபல்.

 

0 comments: