நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் "சி.எஸ்.': பிரணாப் முகர்ஜி


கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில்
 சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு நினைவு நாணயத்தை 
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட
 அதை பெற்றுக்கொள்கிறார்

கோவை, ஆக. 28: நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கி நவீன இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தவர் என முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியத்துக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டினார்.
மத்திய அரசு சார்பில் சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு நிறைவு நினைவு நாணயம் வெளியீட்டு விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. பீளமேட்டில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழக (சிட்ரா) அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், நினைவு நாணயத்தை வெளியிட்டு நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியது:
இளம் வயதிலேயே பெரும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட சி.சுப்பிரமணியம், அதில் வெற்றி கண்டார். நவீன இந்தியாவை கட்டமைப்பதில் அவரது பங்கு அளவிட முடியாதது. 1974-ல் நாடு பொருளாதார ரீதியாகக் கடுமையான நெருக்கடி சூழலைச் சந்தித்தது. பணவீக்கம் 24 சதவீதத்தைத் தாண்டியது. அப்போது நிலவிய எண்ணெய் பற்றாக்குறையால், பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. உணவு தானியங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய கப்பலை எதிர்நோக்கி இருக்க வேண்டியிருந்தது.
அன்றைய சூழலில் நிதி அமைச்சராக இருந்த சுப்பிரமணியம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், மூன்றே ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது.
பொருளாதார மாற்றங்களால் பணவீக்கம் பெருமளவு குறைந்தது. பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்படும். இச்சூழலில், பணவீக்கம் குறைந்தாலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பஞ்சப்படியில் கைவைக்க மாட்டோம் என்று உறுதி அளிக்கும் நிலைக்கு மாறியது. எதற்கெடுத்தாலும் இறக்குமதி என்ற நிலை மாறி, நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்தது. இதற்கெல்லாம் அடித்தளமாக இருந்தவர் அமைச்சர் சுப்பிரமணியம்தான்.
பட்டினி, பஞ்சம் என்ற நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தியாவை மாற்றி நவீன இந்தியாவை உருவாக்குவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தியதில் அவரது பங்கு அளவிட முடியாதது. வேளாண்மையில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் புகுத்தி பசுமைப் புரட்சிக்கு வித்திட்டார்.
மாநில முதல்வர்களுக்கு மட்டுமே மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கிய காலத்தில், மாநில அமைச்சராக இருந்த சுப்பிரமணியத்தின் திறமைகளைக் கண்டு அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை அப்போதைய பிரதமர் நேரு வழங்கினார். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு சரியானதுதான் என்பதை தனது திறமையின் மூலம் நிரூபித்துக் காட்டினார் சுப்பிரமணியம். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் குடியரசுத் தலைவர், பிரதமர்களை மட்டுமே அமெரிக்க அதிபர் ஜான்சன் சந்தித்து வந்த சூழலில், அமைச்சராக இருந்த சுப்பிரமணியத்தைச் சந்திக்க வாய்ப்பு அளித்தார். 10 நிமிடங்கள் ஒதுக்கிய அவர், பின்னர் ஒரு மணி நேரம் அவருடன் உரையாடினார். நாட்டின் மீது சுப்பிரமணியம் கொண்டுள்ள பற்றை, அதிபர் ஜான்சன் வியந்து பாராட்டினார்.
எந்த துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் அதன் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர் சுப்பிரணியம். வேளாண்மை மற்றும் பொருளாதாரத்தில் இந்தியாவை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர அளவில்லா முயற்சிகளை எடுத்த பெருமை அவரையே சேரும் என்றார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு ஆகியோர் பேசினர்.
சி.சுப்பிரமணியம் நினைவு நாணயத்தை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட அதை சுப்பிரமணியத்தின் மகன் ராஜசேகரன், மகள்கள் அருணா, சுதந்திரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

 

0 comments: