தாய்மொழியில் படித்தால்தான் சிந்தனைத் திறன் மேம்படும்: அமைச்சர் பொன்முடி

சென்னை, ஆக. 24: தாய்மொழியில் படிக்கும் மாணவர்களுக்குத்தான் சிந்தித்து செயல்படும் ஆற்றல் இருக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர்
 பொன்முடி கூறினார்.

 தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழ்நாடு அறிவியில் தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து அறிவியல் மன்ற வெள்ளி விழாவை சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்தின.
 இதில் தமிழகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள், சிறந்த கல்வியாளர்கள், இளம் சாதனையாளர்கள் ஆகியோருக்கு விருதுகளும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.
 விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
இந்த விழாவில் பேசிய கல்வியாளர்கள் அனைவரும் நம்முடைய கல்வி முறைமாணவர்களை வெறும் புத்தகப் புழுக்களாக மட்டுமே வைத்திருக்கிறது; அவர்களின் சிந்தனைத் திறனை வளர்த்து அவர்களை ஆற்றல் உடையவர்களாக மாற்றுவதில்லை என்று குறிப்பிட்டனர். இந்தப் பிரச்னைக்கு விடை காண வேண்டியவர்களே இந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள்.
 சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் கல்வியை நாம் அளித்திருக்கிறோமா? கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்குவதுதான் அரசின் வேலை. ஆனால் அதன் பயனை மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பொறுப்பு கல்வி நிறுவனங்களுக்கும் 
ஆசிரியர்களுக்கும்தான் உண்டு.
 சிந்திக்கும் ஆற்றலை அளிக்கும் கல்விக்குத் தடையாக இருப்பது அரசோ, ஆசிரியர்களோ அல்ல, மாணவர்களின் பெற்றோர்கள்தான் காரணம். இதை பெற்றோர்கள் தவறாக நினைக்கக் கூடாது. தாங்கள் விரும்பும் துறைகளில் அல்லது தாங்கள் விரும்பி அடைய முடியாத துறைகளில் தங்கள் பிள்ளைகளை நுழைக்கவே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் உண்டு என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
 சிறு குழந்தைகளைக் கூட இவர்கள் விடுவதில்லை. காலையில் எழுந்தவுடன் ஏதாவது ஒரு வகுப்பு, பிறகு பள்ளி, மாலையில் இன்னொரு வகுப்பு, டியூஷன் என நாள் முழுவதும் -பிள்ளைகளைச் சுதந்திரமாக விடாமல் - இயந்திர வாழ்க்கைக்குப் பழக்குகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். 
மேலும், ஆங்கிலம் கற்றால்தான் பெருமை என நினைக்கிறார்கள். தாய்மொழியில் படிக்கும்போது மேம்படும் மாணவர்களின் சிந்தனைத் திறன், ஆங்கிலத்தில் படித்தால் நிச்சயம் இருக்காது. ஆங்கிலம் படித்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லலாம் என்றாலும் அப்படிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த சதவீதமே.
 இன்றைய கல்விமுறையில் மாணவர்களின் மனப்பாடத் திறனைத்தான் வளர்த்துவருகிறோம் என்ற உண்மையை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். அதை மாற்ற இந்த அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதற்காகத்தான் முதல்வர் கருணாநிதி, பள்ளிகளில் செயல்வழிக் கல்வித் திட்டம், சமச்சீர் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
 அனைத்துத் தரப்பு மாணவர்களிடமும் அவர்களிடமுள்ள திறமைகளைக் கண்டறிந்து அவர்களைப் பாராட்டி தட்டிக்கொடுக்கும் கடமை ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது. தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆர்வம் இருக்கும் துறையில் அவர்களை வழிநடத்தும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது என்றார்.
 உயர் கல்வித்துறையின் முதன்மைச் செயலர் க.கணேசன் பேசியதாவது:
வெற்றிகரமான மனிதனை உருவாக்குவதை விட உயர்ந்த குறிக்கோளுடன் நல்ல நெறியுடைய மனிதனை உருவாக்குவதுதான் சிறந்த கல்வி.
 மாணவர்கள் வெறுமனே படித்துப் பட்டம் பெறுவதை விட ஆராய்ச்சி மனப்பான்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் உயர் கல்வித்துறையில் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இதை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 இன்று இளம் சாதனையாளர் விருது பெறும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் மிகப் பெரிய விஞ்ஞானிகளாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் உருவெடுத்து உலகுக்கு நன்மை செய்ய வேண்டும். தமிழர்களின் கண்டுபிடிப்புகள் உலகத்துக்குப் பயன் தந்தன என்பதுதான் மிகச் சிறந்த செய்தியாக இருக்க வேண்டும் என்றார்.
 விழாவில் மருத்துவ அறிவியல் பிரிவில் டாக்டர்கள் சுனிதி சாலமன், மோகன் காமேஸ்வரன், எஸ்.எம்.சந்திரமோகன் உள்பட 28 ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

 

0 comments: