சென்னையில் மொழியியல் ஆய்வு மையம் நிறுவ வேண்டும்: பொள்ளாச்சி என். மகாலிங்கம்

சென்னை, ஆக.30: சென்னையில் மொழியியல் ஆய்வு மையம் நிறுவ வேண்டும் என தொழிலதிபர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் தெரிவித்தார்.
பொள்ளாச்சி என். மகாலிங்கம் எழுதிய "வள்ளலாரின் வாழ்க்கையும், லட்சியங்களும்' ​, கே.பி. சிவகுமார் எழுதிய "மாற்றம்' ஆகிய ஆங்கில நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அதில் பொள்ளாச்சி என். மகாலிங்கம் பேசியதாவது:
வள்ளலாரின் வாழ்க்கை முறைகளை கூறியுள்ள இந்த நூல்கள், மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். நான் வள்ளலாரின் கொள்கைகளை 1954-ம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறேன்.
மனிதர்கள் எவ்வாறு தங்களின் உடலையும், மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது குறித்த பல அரிய தகவல்களை எளிய முறையில் வள்ளலார் நமக்குக் கூறியுள்ளார்.
வள்ளலாரின் உயரிய கருத்துகளை உலக மக்களிடையே பரப்புவதற்காக அவர் எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பது அவசியம். இந்தப் பணிகளுக்காக சென்னையில் மொழியியல் ஆய்வு மையத்தை நிறுவ வேண்டும்.
இந்த மையத்தை நிறுவ நான் முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்களின் ஒத்துழைப்பு இதற்கு அவசியம் என்றார் அவர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜன், அருள்ஜோதி சங்கத்தின் செயலாளர் சோமசுந்தரம், நாரதகான சபா செயலாளர் ஆர். கிருஷ்ணசாமி, நூலாசிரியர் கே.பி. சிவகுமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

0 comments: