கல்வி நிலையங்கள் பணம் காய்க்கும் மரங்களாக முடியாது:ப. சிதம்பரம்

சென்னை, ஆக. 28: தனியார் கல்வி நிலையங்கள் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களாக மாறுவதைக் கட்டுப்படுத்த நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னையில் லயோலா கல்லூரியில் சனிக்கிழமை நடந்த முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
இந்தியாவில் குழந்தைகளின் கல்விதான் மிக உயர்ந்த விஷயமாக பெற்றோரால் கருதப்படுகிறது. அதனால் இந்த சூழ்நிலையில் காளான்கள் போல புதிய கல்வி நிலையங்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது.
ஆனால், அவர்கள் பணம் காய்க்கும் மரங்களைப் போல ஆவதை அனுமதிக்க முடியாது.
கல்வியில் தனியாரின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் இல்லை. தரமான கல்வியையும், நன்னெறி வழியில் மாணவர்கள் உருவாக்கப்படுவதையும் உறுதி செய்ய சில விதிமுறைகள் தேவைப்படுகின்றன. அதனால்தான் கட்டுப்படுத்துவதற்கு நிறைய மசோதாக்கள் தேவைப்படுகின்றன.
வெவ்வேறு சமூகத்தினருக்கிடையே வெறுப்புணர்வு ஏற்படுவது கவலை தருவதாக இருக்கிறது. இவையெல்லாம் எப்படித் தோன்றின என்பது ஆச்சரியமாக உள்ளது.
உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றபின், ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில்  பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தினரைப் பாதுகாப்பதை சவாலாக எடுத்துச் செய்ய வேண்டியிருந்தது.
மதச்சார்பின்மையும் சகிப்புத் தன்மையும் நாட்டுக்கு முக்கியமானவை. இந்த நன்னெறிகளை மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் போதிக்க வேண்டும் என சிதம்பரம் வலியுறுத்தினார்.

 

0 comments: