அரசின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை : மத்திய அரசின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடக்கிறது.

இம்முகாம் குறித்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தன்னாட்சி நிறுவனமான தொழில் பழகுனர் பயிற்சி (அப்ரன்டீஸ்ஷிப்) வாரியத்தின் தென்மண்டல இயக்குனர் அய்யாக்கண்ணு சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மத்திய அரசின் தொழில் பழகுனர் பயிற்சி வாரியத்தின் சார்பில், பாலிடெக்னிக் மற்றும் பிளஸ் 2 தொழில் கல்வி படித்து முடித்தவர்களுக்கு, ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் இந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் இவர்களுக்கு மத்திய அரசு மூலமும், பழகுனர் பயிற்சி பெறும் தொழில் நிறுவனங்கள் மூலமும் தலா 50 சதவீதம் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இவ்வகையில், இந்த ஆண்டு 25.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இருந்தும் இந்நிறுவனம் மூலம் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், சென்னை வந்து அலைவதை தடுக்க, குறிப்பிட்ட மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையொட்டி, வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

 

0 comments: