வாக்குப் பதிவு இயந்திரத்தில் சந்தேகம் எழுப்பியவர் கைது

புது தில்லி, ஆக.24: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யலாம் என்று கூறியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் வெளிப்படைத் தன்மை குடிமக்கள் அமைப்பின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரசாத்தை ஆந்திர போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு மும்பை பகுதியில் உள்ள பழைய சுங்கவரி இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு இயந்திரத்தை காணாமல் போனதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் போலீஸில் புகார் அளித்தனர். கடந்த ஏப்ரலில் இந்த புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மகாராஷ்டிர போலீஸôர் விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹரி பிரசாத் திருடியதாக தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீஸôர் முடிவு செய்தனர். ஹரி பிரசாத் அவரது சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸôருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஹரி பிரசாத்தை சனிக்கிழமை கைது செய்தனர்.
தேர்தல் ஆணையம் நிராகரிப்பு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யலாம் என்ற ஹரி பிரசாத் குற்றச்சாட்டினை மத்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்பதற்கு சாத்தியமே கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஹரி பிரசாத் கைது செய்யப்பட்டதற்கு இந்திய ஜனநாயக பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்று புகார் தெரிவித்ததால் அவரை கைது செய்து பழிவாங்கியுள்ளதாக குற்றம்சுமத்தியுள்ளது.
ஹரி பிரசாத் கைதை கண்டித்து மத்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷிக்கு கடிதமும் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலும் என்ற புகார் கூறுபவர்களை அதை நிரூபிப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களை தண்டிக்கக்கூடாது என்று இந்திய ஜனநாயக பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எங்களுக்கு அதிகாரம் இல்லை-துணை தேர்தல் ஆணையர்: மும்பை போலீஸôர் நடத்திய விசாரணையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹரி பிரசாத் திருடியதாக தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கையை போலீஸôர் எடுத்துள்ளனர்.
இதில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் கிடையாது என்று துணை தேர்தல் ஆணையர் அசோக் சுக்லா தெரிவித்தார்

 

0 comments: