காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் ஏழை மாணவி பங்கேற்பு; வறுமையை கடந்து சாதித்தார்

காமன்வெல்த் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காக சென்னை அயோத்திக்குப்பம் குடிசை பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடும்ப வறுமையைக் கடந்து சாதித்த மாணவி, இன்னொரு நீச்சல் வீரரின் தந்தையின் உதவி மூலம் நேற்று டில்லி புறப்பட்டு சென்றார். சென்னை அயோத்திக்குப்பம் குடிசை பகுதியில் பிறந்து, வறுமையில் "நீந்திய' பெண், "முயற்சி திருவினையாக்கும்' என்ற பழமொழிக்கேற்ப இன்று, இந்தியாவின் சார்பில் காமென்வெல்த் போட்டியில் "நீந்த' தகுதியும் பெற்றுவிட்டார். அந்த வீராங்கனையின் பெயர் ராகவி(16). சென்னை மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் இயங்கும் பள்ளியின் பிளஸ் டூ மாணவி. இவரது தந்தை மணிபால். சென்னை மாநகராட்சி துப்புரவு மேஸ்திரி. இவரது மனைவி ஈஸ்வரி, குடும்பத் தலைவி. இரண்டாவது மகளான ராகவிக்கு சிறுவயது முதலே நீச்சலில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. கடந்த 1998ம் ஆண்டு முதல் சென்னை மெரீனா கடற்கரை நீச்சல் குளத்தில் இவர் நீச்சல் பழக ஆரம்பித்தார். அங்கு நடந்த போட்டியில், 3 மணி நேரம் 12 நிமிடங்கள் நீந்தி இவர் சாதனை படைத்தார். அப்போது மேயராக இருந்த துணை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார். அதன் பிறகு, ராகவிக்கு நீந்துவதில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. பள்ளி மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்தார். மாநில, தேசிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் அவருக்கு ஏற்பட்டது. மகளின் ஆர்வத்தை உணர்ந்த மணிபால், கடன் வாங்கி தனது மகளை பல்வேறு போட்டிகளுக்கு அனுப்பி வைத்தார். இப்படி வறுமையில் நீந்திய ராகவி, கடந்த ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டி உட்பட தொடர்ந்து மூன்று முக்கிய போட்டிகளில், "தங்கப் பதக்கம்' வென்று சாதித்தார்; இவரது திறமையைக் கண்டு மற்றொரு நீச்சல் வீரரான அக்னீஸ்வரின் தந்தை ஜெயபிரகாஷ், உதவ முன்வந்தார். அவரது உதவியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று பயிற்சி பெற்று, போட்டிகளிலும் பங்கேற்று ராகவி பதக்கங்கள் குவித்தார். இதுபோல், சிறுவயது முதல் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்த ராகவி, காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் சாதிக்கும் கனவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். நாடு முழுவதும் நிறைய திறமைசாலிகள் இருக்கும் போது, இப்போட்டியில் பங்கேற்க தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆதங்கமும் ராகவிக்கு ஏற்பட்டது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கான முறைப்படியான அழைப்பு நேற்று முன்தினம் இரவு ராகவிக்கு கிடைத்தது. நேற்றே புறப்பட்டு, டில்லி வருமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதை கேள்விப்பட்டதும் ராகவிக்கும், அவரது பெற்றோருக்கும் ஒரு புறம் அளவு கடந்த ஆனந்தமும், மறுபுறம் சோகமும் ஏற்பட்டது.இதற்கு காரணம், அங்கு சென்று பல நாட்கள் தங்கி பயிற்சி எடுப்பதற்கு நிறைய செலவாகும் என்பது தான். உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கஷ்டத்தில் இருப்பதால் அவர்களிடமும் பணம் கேட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்த விவரத்தை கேள்விப்பட்ட ஜெயபிரகாஷ், தனது சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். அதன் மூலம் நேற்று மாலை 5 மணிக்கு, சென்னையில் இருந்து ராகவி டில்லி புறப்பட்டு சென்றார். வறுமையைக் கடந்து சாதித்த ராகவி, காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சார்பில் சாதிப்பார் என்பதை நம்பலாம். ராகவி தாய் பேட்டி: இதுகுறித்து ராகவியின் தாய் ஈஸ்வரி கூறுகையில், "நீச்சல் போட்டியில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், "பிரஸ்ட் ஸ்ட்ரோக்' என்பது மிகக் கடினமாக போட்டி. அந்த பிரிவில் தான் ராகவி பங்கேற்கிறார். முன்னர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தான் ராகவி பயிற்சி எடுத்தார். கட்டடப் பணிக்கு நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளதால், மெரீனா கடற்கரை அண்ணா சமாதி நீச்சல் குளத்தில் தான் பயிற்சி எடுத்து வந்தார். காமன்வெல்த் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து மிக திறமை வாய்ந்த வீரர்கள் பங்கேற்பர். இருப்பினும் என்னால் முடிந்த அளவு போராடி நாட்டிற்காக பதக்கம் வெல்வேன் என எங்களிடம் ராகவி நம்பிக்கையுடன் கூறினார். அவர் சொன்னதை நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகிறோம்; அதற்காக இறைவனையும் வேண்டிக் கொள்கிறோம்' என்றார்.

 

1 comments:

Anonymous said...

ஏழ்மை எம்மை என்ன செய்துவிட முடியும். வெற்றியோடு திரும்பிவா பெணணே.