தத்தனூர் எம்.ஆர். கல்லூரி சார்பில் உடையார்பாளையம் மகளிர் பள்ளியை தரம் உயர்த்த ரூ. 2 லட்சம் நிதியுதவி


Emblem


அரியலூர், ஜூலை 7: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள அரசு மகளிர்  உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த அரசுக்கு செலுத்த வேண்டியத் தொகை ரூ. 2  லட்சத்தை தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர்  எம்.ஆர். ரகுநாதன் அண்மையில் வழங்கினார இதனடிப்படையில், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத்  தரம் உயர்த்தப்பட்டது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.விழாவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 வகுப்பை தொடக்கிவைத்து, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர்  எம்.ஆர். ரகுநாதன் பேசியது:

     நான் பிறந்த ஊரில் உள்ள அரசு மகளிர் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ. 2 லட்சத்தை  செலுத்தினேன்.  தரம் உயர்த்தப்பட்ட இந்த அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை  மாணவிகள் பயன்பெறும் வகையில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப்  பெறும் மாணவிகளுக்கு மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் உயர் கல்வி  இலவசமாக வழங்கப்படும். அதேபோல, 4 முதல் 10 வது இடங்களைப் பெறுகிற 7 மாணவிகளுக்கு மீனாட்சி ராமசாமி அறிவியல் கல்லூரியில் இலவசக் கல்வி  வழங்கப்படும் என்றார் அவர்.

     அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்த ரூ. 2 லட்சம் வழங்கிய எம்.ஆர். ரகுநாதனை,  பள்ளித் தலைமையாசிரியர் கே. சேப்பெருமாள், ஆசிரியர் ஷஇன்ஷா ஆகியோர் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர்.

     இந்நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவர் லதா சர்வாதிகாரி, பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் காதர் பாட்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

0 comments: