மாணவர்களிடையே தமிழில் உரையாடும் திறன் குறைந்துவிட்டது:சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தர்

 
சென்னை, ஜூலை 31: மாணவர்களிடையே தமிழில் உரையாடும் திறன் குறைந்துவிட்டது என்று சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தர் திருவாசகம் கவலை தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம், என்.எஸ்.எஸ்., செஞ்சுருள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஆகியன இணைந்து டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர்  கல்லூரியில், கல்லூரிகளுக்கிடையில் "இளவட்டம்' என்ற தலைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

துணை வேந்தர் க. திருவாசகம் தலைமை வகித்து கலை நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்தார். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மு. கந்தசாமி, கல்லூரி முதல்வர் உஷா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு பேச்சுப்பேட்டி, ஓவியப்போட்டி, பலகுரலில் பேசுதல், கோலப்போட்டி, ஆடைகள் வடிவமைத்தல், இசைப்போட்டி, வீதி நாடகப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக துணை வேந்தர் க. திருவாசகம் செய்தியாளர்களிடம் கூறியது:

மாணவர்களுக்கு படிப்போடு உடல்நலம் குறித்தும் கற்றுத் தரவேண்டியது கல்லூரிகளின் கடமை. குறிப்பாக இன்றைய தினத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.

எய்ட்ஸ் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் மணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் கல்வி திறமையைத் தவிர மற்ற திறமைகளும் வெளிக் கொண்டுவர வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களிடையே போட்டிகள் நடத்துவதன் மூலம் அவர்களது திறமை மேலும் வளர வாய்ப்பு உள்ளது.

மாணவர்களைப் பற்றி தவறான கருத்துகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு தேவையான நூல்களை திரட்டிதர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஒரே நாளில் 7.50 லட்சம் புத்தகங்களை திரட்டி கொடுத்த பெருமை மாணவர்களையே சேரும்.

மாணவர்களிடையே தமிழில் உரையாடும் திறன் குறைந்து வருகிறது. கலை நிகழ்ச்சிகள் நடத்தினால் அனைத்தும் மேற்கத்திய பாணியில்தான் உள்ளது. தமிழ் வழியில் பண்பாடு சிதையாமல் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்த முடியும். அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்த வேண்டும்.

கலை நிகழ்ச்சிகள் மூலம் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை மாணவர்களிடையே வளர்க்கும் முயற்சியில் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கும். இதற்காக இந்த ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் திருவாசகம்.

 

0 comments: