ரூ.2 கோடி செலவில் நானோ செயற்கைக்கோள் : அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்குகிறது

சென்னை : ""அனுசாட் மைக்ரோ செயற்கைக்கோளை தொடர்ந்து, இரண்டு கோடி ரூபாய் செலவில் 10 கிலோ எடையுள்ள நானோ செயற்கைக்கோளை உருவாக்கும் முயற்சியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது,'' என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் கூறியதாவது: அண்ணா பல்கலையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை உருவாக்கப்படுகிறது. 30 கோடி ரூபாய் வைப்பு நிதி மூலம் இந்த உதவித்தொகை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம், ஆண்டுதோறும் இரண்டு கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் 45 மாணவர்களுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும்.

மூன்று ஆண்டுகளுக்கு 135 மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஆராய்ச்சி உதவித்தொகையை, மொத்தம் 250 மாணவர்களுக்கு வழங்கும் வகையில் அதிகரிக்க விரும்புகிறோம். தமிழகத்தில் உள்ள 474 பொறியியல் கல்லூரிகளில் ஐந்து லட்சத்து 20 ஆயிரம் படிக்கின்றனர். இக்கல்லூரிகளுக்கு 32 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுவர். கடந்த இரு ஆண்டுகளாக அண்ணா பல்கலையில், 820 பேர் பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் நெப்ராஸ்கா லிங்கன் பல்கலையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் ஐந்து மாணவர்கள் இரட்டை பிஎச்.டி.,பட்டம் பெற முடியும். நான்கு ஆண்டுகளில் அண்ணா பல்கலையில் ஒரு பிஎச்.டி., பட்டமும், நெப்ராஸ்கா லிங்கன் பல்கலையில் ஒரு பிஎச்.டி., பட்டமும் பெற முடியும்.

பிரான்சின் எகோல் சென்ட்ரல் நான்டஸ் கல்வி மையத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, நான்கு மாணவர்கள் இரட்டை எம்.இ., பட்டம் பெற முடியும். ஆறு ஆண்டு படிப்பில் அண்ணா பல்கலையில் பி.இ., - எம்.இ., பட்டத்தையும், பிரான்ஸ் கல்வி மையத்தில் டிப்ளமா, எம்.இ., பட்டத்தையும் மாணவர்கள் பெற முடியும். பிரான்ஸ் கல்வி மையத்தில் நமது மாணவர்கள் தங்கியிருக்கும் போது ஆகும் செலவை அக்கல்வி மையமே ஏற்றுக் கொள்ளும்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், ஐந்து கோடி ரூபாய் செலவில் 40 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட "அனுசாட்' மைக்ரோ செயற்கைக்கோள், இஸ்ரோ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, இரண்டு கோடி ரூபாய் செலவில் 10 கிலோ எடையுள்ள நானோ செயற்கைக்கோளை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ., அமைப்புகளுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., அமைப்புகளின் அனுமதி கிடைத்தவுடன் நானோ செயற்கைக்கோளை உருவாக்கும் பணிகள் துவங்கும். தகவல்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரிமாற இந்த நானோ செயற்கைக்கோள் உருவாக்கப்படவுள்ளது. இவ்வாறு மன்னர்ஜவகர் கூறினார்.

பேட்டியின் போது, அண்ணா பல்கலை பதிவாளர் சண்முகவேல், ஆராய்ச்சி மைய இயக்குனர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

0 comments: