பொதுக் கடன் அட்டை திட்டம் மதுரை வங்கிகளில் துவக்கம்

மதுரை:மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் திட்டத்தின் கீழ் கணக்குகள் வைத்துள்ளோருக்கு "பொதுக் கடன் அட்டை திட்டம்' நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.வங்கியாளர்கள் கூட்டத்தில் இத்திட்டத்தை துவக்கி வைத்து கலெக்டர் காமராஜர் பேசியதாவது:மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் திட்டத்தின் கீழ் 4.80 லட்சம் பேருக்கு "0' வைப்புத் தொகை கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் பொதுக் கடன் அட்டை திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.இதை பயனாளிகள் தங்களுக்கு தேவைப்படும் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையான முறையில் கடன்கள் வழங்கப்படும்.

இதற்கு சொத்து ஜாமீன் மற்றும் நபர் ஜாமீன் தேவையில்லை. மூன்று வருடங்களுக்கு அசலை திரும்ப செலுத்த வேண்டிய அவசியமில்லை. வட்டி மட்டும் செலுத்தினால் போதும். மாவட்டத்தில் உள்ள பல வங்கிகள் மூலம் 4600 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 8,402 பழுதடைந்த வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பழுதுபார்ப்பதற்கு இந்த திட்டத்தை குடியிருப்போர் பயன்படுத்தலாம், என்றார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சாமுவேல் இன்பதுரை, மகளிர் திட்ட அலுவலர் கிருஷ்ணம்மாள், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சங்கரநாராயணன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஜார்ஜ், முன்னோடி வங்கி மேலாளர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.

 

0 comments: