இளைஞர்களுக்கு வெளிநாடு வேலைவாய்ப்பு : தர்மபுரி கலெக்டர் அழைப்பு

தர்மபுரி: "புதுக்கோட்டையில் நாளை துவக்கி இரு நாள் நடக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாமில் தர்மபுரி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்' என, கலெக்டர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் படிப்புகளை பதிவு செய்து ஏராளமான இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர். குறிப்பாக டாக்டர்கள், இன்ஜினீயர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், உடலுழைப்பாளர்கள், எலக்ட்ரீசியன்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் தற்போது வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றனர். தற்போது வெளிநாட்டு வேலை அளிப்போரிடம் இருந்து பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு நேரடியாக சென்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்வதால் ஏற்படும் பயண அலைகழிப்பு, நேரம் மற்றும் செலவினத்தை தவிர்க்கும் வகையில் தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்களை ஒவ்வொரு நகரிலும் நடத்தப்படுகிறது. அதன்படி வெளிநாட்டில் வேலைபார்க்கும் ஆர்வமுடைய அனைவரும் பயன் பெறும் நோக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நாளை 23ம் தேதி துவங்கி இரு நாள் நாள் நடக்கிறது.

காலை 9 மணிக்கு துவங்கும் முகாம் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த சிறப்பு பதிவு முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். முகாமில் லேபர், கொத்தனார், தச்சர், ஸ்டீல் பிட்டர், பிளம்பர், பெயிண்டர், ஐ.டி.ஐ., டிப்ளமோ, தொழில் அனுபவம் பெற்றவர்கள், ஹோட்டல் தொழிலாளர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதிவு கட்டணமாக 442 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நர்சிங், பராமெடிக்கல் டெக்னிசீயன்கள் மற்றும் அனைத்து மருத்துவ பணியாளர்கள், இளநிலை இன்ஜினீயரிங், முதுநிலை இன்ஜினீயரிங், முதுநிலை கணக்காளர், முதுநிலை பட்டதாரிகள், முதுநிலை மேலாண்மை படித்தவர்கள், கம்யூட்டர் பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலைவாய்ப்பு பதிவு கட்டணமாக 772 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள் 995 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள பயனாளிகள், இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறப்பு பதிவு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனுபவ சான்றிதழ், பாஸ்ஃபோர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள், நான்கு புகைப்படங்களுடன் வர வேண்டும். அனுபவம் மற்றும் பாஸ்ஃபோர்ட் இல்லாதவர்களும் முறையான கல்வி தகுதி இல்லாமல் அனுபவம் மட்டும் உள்ளவர்களும் கலந்து கொண்டு பதிவு செய்யலாம். மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் 9940393617, 9952940460, 9443690272 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

0 comments: