மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடிக்கும் திறன் குறைவான கொசுக்கள்

மதுரை: "மரபணு மாற்றப்பட்ட கடிக்கும் திறன் குறைவான கொசுக்கள், மலேசியாவில் இனப்பெருக்கத்திற்கு விடப்பட்டுள்ளன. இந்தியாவில், இது ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது,'' என, மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொறுப்பு) பி.கே. தியாகி தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் மதுரையில் நடந்த உயிரி ஆய்வகப் பயிற்சி பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது : "எடிஸ் எஜிப்டே' எனப்படும் பெண் கொசுவால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனவே கொசுக்களை இனப்பெருக்கத்தை கண்டுபிடித்தும் புதிய முறையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். அதில் முக்கியமானது மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுவின் மூலம், பெண் கொசுக்களை இனப்பெருக்கம் செய்யவைத்து, அவற்றின் உற்பத்தியை தொடர்ந்து குறைக்க முடியும். கொசுவின் "டி.என்.ஏ.,' வில், குறிப்பிட்ட ஜீனை கண்டறிந்து அவற்றின் மரபை மாற்றுகிறோம். எந்தப் பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதோ, அங்கு மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்களை பறக்கவிடவேண்டும். இனப்பெருக்கத்தின் போது, பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் வலிமையற்றதாகவும், கடிக்கும் திறன் குறைந்ததாகவும் இருக்கும். இதன்மூலம் கொசுக்களின் சந்ததியை கட்டுப்படுத்தலாம். நோய் பரவுவதை தடுக்கலாம். மலேசியாவில் சமீபத்தில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2000 ஆண் கொசுக்கள், கொசுக்கள் அதிகமுள்ள பகுதியில் பறக்கவிடப்பட்டன. அங்கே இதற்கான அனுமதி கிடைத்துவிட்டது. இந்தியாவில் தற்போது ஆராய்ச்சி நிலையில் தான் இருக்கிறோம். ஆராய்ச்சிக்கு பின், அவற்றை செயல்படுத்துவது, அரசு அனுமதியுடன் இயற்கைச் சூழ்நிலையோடு வாழச் செய்வது என்கிற நிலைகள் உள்ளன, என்றார்.
மதுரை காமராஜ் பல்கலை மைக்ரோபியல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் சண்முகசுந்தரம் பேசுகையில்," மரபணு மாற்றப்பட்டதால், ஏற்படும் நன்மை, தீமைகளை முழுதும் ஆய்வுசெய்யவேண்டும். திறந்த வெளி சாக்கடைகளின் மூலம் "கியூலெக்ஸ்', நல்ல தண்ணீர் மூலம் "எடிஸ் எஜிப்டே' கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. பாதாள சாக்கடை திட்டம் முழுமையடையும் போது, கொசுக்கள் உற்பத்தி கட்டுப்படுத்தப்படும்,'' என்றார். மதுரை மருத்துவக்கல்லூரி மைக்ரோ பயாலஜி துறைப் பேராசிரியை ஜான்ஸி, மதுரை விஞ்ஞானி அருணாச்சலம், பமாகா பல்கலை விலங்கியல் துறைத் தலைவர் மடாமா பவுரி, மகிடோல் பல்கலை "வெக்டர்' துறை விஞ்ஞானி வோரசந்த் பேசினர். சர்வதேச நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர். 

 

0 comments: