காந்திய சிந்தனைகள் அனைத்து இடங்களிலும் பரவ வேண்டும்

http://img.dinamalar.com/data/large/large_114419.jpg

சென்னை: ""காந்திய சிந்தனைகள் பரவ, அவரது நூல்களை அனைத்து இடங்களிலும் இடம் பெறச் செய்ய வேண்டும். காந்திய மையங்களை அனைத்து இடங்களிலும் திறக்க வேண்டும்,'' என, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ். ராகவன் பேசினார்.


சென்னை காந்தி கல்வி நிலையம் சார்பில், டி.டி., திருமலை நினைவு மாநில அளவிலான பரிசுகள் வழங்கும் விழா, நேற்று தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடந்தது. விழாவிற்கு, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ். ராகவன் தலைமை வகித்துப் பேசியதாவது: இன்றைய சூழ்நிலையில் காந்தி இருந்தால் எப்படி இருக்கும், அவர் இன்றைய பிரச்னைகளை எப்படி எதிர் கொள்வார் என்பது குறித்து, பலரும் பல்வேறு இடங்களில் விவாதிப்பது உண்டு. அன்னியர் ஆட்சியின் போதான அவரது கொள்கைகளை, தற்போதைய மக்களாட்சியின் போது எப்படி செயல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக, இந்தியில் ஒரு சித்திரமும் வெளியாகி இருந்தது. அது நன்றாக இருந்ததாகவும் பலரும் கூறினர்.


இதே போல், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் பிறந்த அரிஸ்டாட்டில், போர்டு நிறுவன அதிபராக இருந்தால் எப்படி செயல்படுவார் என்பது குறித்து, டாம் மாரிசன் என்பவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலாக எழுதினார். அதே போல், நான் காந்தி, ரிலையன்ஸ் அதிபராக இருந்தால் எப்படி செயல்படுவார் என்பது குறித்து நூல் எழுதலாமா என நினைப்பதுண்டு. இப்போது உலகம் முழுவதும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், முக்கிய இடங்களில் பகவத் கீதை அல்லது பைபிள் இடம் பெற்றுள்ளது.


காந்திய சிந்தனைகள் பரவ நான் அரசுக்கு இரண்டு யோசனைகள் சொல்கிறேன். ஒன்று, கீதை, பைபிளைப் போல், காந்திய சிந்தனைகள் குறித்த ஒரு சிறிய நூலை இது போன்ற இடங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும். அதே போல், காந்திய கருத்துக்களை ஒரு சிறிய வட்டத்தில் சுருக்காமல், காந்திய மையங்களை அனைத்து இடங்களிலும் துவக்க வேண்டும். இதன் மூலம் இன்றைய தலைமுறையினருக்கும் காந்திய சிந்தனைகள் பரவும். இவ்வாறு பி.எஸ். ராகவன் பேசினார்.


விழாவில், பிரார்த்தனை பாடலை, சென்னை செம்மொழி மைய அருணா சரவணன் பாடினார். காந்தி கல்வி நிலைய ஆய்வு ஒருங்கிணைப்பாளர் பிரேமா அண்ணாமலை வரவேற்றார். காந்தி கல்வி நிலைய அறங்காவலர் விப்ரநாராயணன் விருந்தினர்களை உபசரித்தார். மகாத்மா காந்தியின் மூத்த சகோதரர் கர்சன்தாஸ் காந்தியின் பேத்தி பிரவீணா பாரிக், மாநில அளவிலான பரிசுகளை வழங்கினார். தமிழக முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். நரேஷ்குப்தா ஏற்பாட்டில், காந்தியடிகளின் வாழ்க்கை குறித்த வீடியோ காட்சி தொகுப்பு பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. தக்கர் பாபா வித்யாலயா செயலர் ஸ்தாணுநாதன், குஜராத்தி மண்டல் செயலர் சுரேஷ் பாரிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், காந்திய சிந்தனைகள் குறித்த போட்டியில் பங்கேற்ற பள்ளிகளுக்கு கேடயமும், மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன. காந்தி கல்வி நிலையத்தைச் சேர்ந்த சரவணன் நன்றி கூறினார். காந்தி கல்வி நிலைய இளைஞர் நல ஆலோசகர் சிவலிங்கம் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். விழாவில், தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

 

0 comments: