இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் புதிய திட்டம் அறிமுகம்

சேலம்: வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சுய தொழில் புரிவதற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் சந்திரகுமார் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் பொருட்டு மானியத்தொகை, வங்கி கடனுதவி மூலம் சுய தொழில் துவங்க "வேலையில்லாத இளைஞருக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்'(யு.ஒய்.இ.ஜி.பி) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டமானது சேலம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆண்டு வருமானம்1.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தொழில் துவங்க அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. திட்ட முதலீடானது உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமாக ஐந்து லட்சம் ரூபாயும், சேவை தொழிலுக்கு மூன்று லட்சம் ரூபாய், வியாபாரத் தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் இருக்க வேண்டும்.பொதுப்பிரிவுக்கு டெபாசிட் தொகை 10 சதவீதம், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர்,  மாற்றுத்திறன் படைத்தோர், மக ளிர், முன்னாள் ராணுவத்தினர், அரவாணிகள் ஆகியோருக்கு ஐந்து சதவீதம் டெபாசிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அனைத்து பிரிவினருக்கும் திட்ட முதலீட்டில் மானியத்தொகை 15 சதவீதம் வரை வழங்கப்படும். தேர்வாகும் பயனாளிக்கு ஒரு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கடன் உதவி பெற சேலம் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ, திட்ட அறிக்கை, கொட்டேசன், ரேஷன் கார்டு அல்லது இருப்பிட சான்று, உறுதிமொழி பத்திரம், ஜாதி சான்று, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி கல்வி சான்று ஆகியவற்றின் ஜெராக்ஸை இணைத்து இரு விண்ணப்பங்களாக சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்துக்காக உற்பத்தி பிரிவில் 200 பேருக்கும், சேவை பிரிவில் 120 பேருக்கும், வியாபார பிரிவில் 80 பேருக்கும் கடனுதவி வழங்க மொத்தம் 60 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தொழில் முனைவோர் சேலம் ஐந்து ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

0 comments: