மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு பயிற்சி : பாரதிதாசன் பல்கலையில் மையம்

திருச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த, பாரதிதாசன் பல்கலை திருச்சி காஜாமலை வளாகத்தில் உள்ளடக்க கல்வி மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


பல்கலை பதிவாளர் ராமசாமி வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டத்தை செயல்படுத்துகிறார். அதன்படி, கடந்த மாதம் 24ம் தேதி நடந்த பாரதிதாசன் பல்கலை ஆட்சிக்குழு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த, காஜாமலை வளாகத்தில் உள்ளடக்க கல்வி மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.


மையத்தில், மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு பயிற்சி வழங்கப்படும். மையத்துக்கான புதிய கட்டிடத்துக்கு, "சிதார் வெசஸல்ஸ்' நிறுவனத் தலைவர் சுப்புராஜ், 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்குகிறார். சமுதாயத்தில் ஆயிரக்கணக்கில் மாற்றுத்திறனாளிகளாக உள்ள செவிப்புலன் இழந்தோர், பார்வைத்திறன் இழந்தோர், உறுப்புக்குறைபாடு உடையோர், மனநலம் குன்றியோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியும், பயிற்சியும் வழங்குவது அவசியம்.


சமுதாய புனரமைப்பு பணியின் ஒரு அங்கமாக மாற்றுத் திறனாளிக்கென்று வடிவமைக்கப்பட்ட, கம்ப்யூட்டருடன் இணைந்த கருவிகளை பயன்படுத்தி அவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணி மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பயன்படுத்தும் பயிற்சி அளிக்கப்படும். இப்பணியை கண்காணிப்பதற்கும், மேம்படுத்தல் ஆலோசனையை வழங்குவதற்கும் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும்.

 

0 comments: