கல்வி தகவல் சேகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

http://img.dinamalar.com/data/large/large_111829.jpg
கோவை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த விபரங்களை துல்லியமாக சேகரிக்கும் பணி, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த விபரங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் புதிய பள்ளி கட்டுமானம், ஆசிரியர் நியமனம், உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு உள்ளிட்ட தேவைகளுக்கு நிதி ஆதாரம் ஒதுக்கப்படுகிறது. இந்த பணிக்கு "மாவட்ட கல்வி தகவல் திட்டம்'(டைஸ்) என பெயரிடப்பட்டுள்ளது. 2010-2011ம் ஆண்டுக்கான "டைஸ்' திட்டத்துக்கு என்னென்ன தகவல்களை சேகரிக்க வேண்டும், எப்படி சேகரிக்க வேண்டும், அதற்கென வழங்கப்பட்டுள்ள படிவத்தை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கும் பயிற்சி முகாம், கோவை டி.இ.எல்.சி., பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சியில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அணி அணியாக பங்கேற்று பயிற்சி பெற்றனர். சென்னையில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர் கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர். பள்ளி உள்கட்டமைப்பு வசதி, பணிபுரியும் ஆசிரியர் எண்ணிக்கை, ஆசிரியர் காலிப் பணியிட எண்ணிக்கை விபரம், மாற்றுத் திறன் குழந்தைகள், அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி விபரம், இலவச கல்வி உபகரணங்கள் விபரம், பள்ளி கழிப்பறை எண்ணிக்கை, மதிய உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை, புதிதாக சேர்ந்துள்ள மாணவர் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக பெறப்பட்டுள்ள ஏ.பி.எல்., அட்டைகள் எண்ணிக்கை விபரம், பிற தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை, பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர் எண்ணிக்கை உட்பட அனைத்து விபரங்களையும் சேகரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி கூறியதாவது: "டைஸ்' திட்டத்தின்படி சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில்தான், ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன தேவை என்பது மதிப்பிடப்படுகிறது. இதன் விபரங்கள் துல்லியமாக இருக்க ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் தகவல் தொகுப்பு மாநில திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

0 comments: