ஆசிரியர்கள் நாள்தோறும் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளணும்

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலை கல்வியாளர் கல்லூரி சார்பில், கல்லூரி மற்றும் பல்கலை வேதியியல் துறை பேராசிரியருக்கான 21 நாள் புத்தாக்க பயிற்சி நிறைவுவிழா நேற்று நடந்தது.கல்வியாளர் கல்லூரி இயக்குனர் சிங்காரவேல் வரவேற்றார். பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் வேணுவானலிங்கம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.பல்கலை சமூகவியல் துறை பேராசிரியர் சங்கர் பேசுகையில், ""புத்தாக்க பயிற்சிக்கு வருபவர் தங்களது அனுபவம், திறமைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். வேதியியல் துறையால் உருவாக்கப்பட்ட ரசாயன உரம் விவசாயம் வளர பயன்பட்டதோ, இல்லையோ. மஹாராஷ்டிரா உள்பட பல பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. விஞ்ஞானிகளுக்கு சமூக சிந்தனை வேண்டும். மண், நீர், மலை, காடு இவை நான்கும் நாட்டின் அரண் போன்றவை. ஆனால், விஞ்ஞான வளர்ச்சியால் அவை இன்று மாசுபட்டு அழிந்து வருகின்றன,'' என்றார்.


சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவன, "ஆர்கானிக்' (கரிம) வேதியியல் விஞ்ஞானி சர்மா பேசியதாவது:மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர் பணி அறப்பணி. நடப்பாண்டு வேதியியல் துறைக்கு மூன்று நோபல் பரிசு கிடைத்துள்ளது. இதை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்.ஹைதராபாத் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இரண்டு விஷயங்கள் குறித்து கவலைப்பட்டார். ஒன்று குழந்தைகள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை எப்படி தூண்டுவது; மற்றொன்று பள்ளிகளில் ஆய்வகங்களை எப்படி கொண்டு செல்வது.எம்.எஸ்.சி., படித்த மாணவர்கள் "தியரி'யில் கெட்டிக்காரர்களாக உள்ளனர். ஆனால், ஆய்வில் கோட்டை விடுகின்றனர். ஆய்வு செய்வதில் திறமை குறைவாக உள்ளனர். இதற்கு போதிய ஆய்வகம் இல்லாததே காரணம். சீனா, ஜப்பானை காட்டிலும் இந்தியாவில் பல்கலைக்கழகம் மிக குறைவு. பத்து லட்சம் சீனர்களில் 900 பேர் ஆய்வாளர்களாக உள்ளனர்.வரும் 2030ம் ஆண்டில் இந்தியா சிறந்த இடத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ஆனால், சர்வதேச அளவில் 100 இடங்களில் இடம்பெற்றுள்ள பல்கலை பெயர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒரு பல்கலை கூட இடம் பெறவில்லை. ஆசிரியர்கள் நாள்தோறும் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

0 comments: