கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்த்தணும் : யூ.ஜி.சி., துணைத்தலைவர் வலியுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில் சி.சுப்பிரமணியம் அறக்கட்டளை சார்பில், "அறிவு நூற்றாண்டு - அறைகூவல்களும், வாய்ப்புகளும்,' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.அறிவியல் தமிழ் த்துறை பேராசிரியர் அண்ணாதுரை வரவேற்றார். துணை வேந்தர் ராசேந்திரன் தலைமை வகித்தார்.


பல்கலை நல்கைக்குழு (யூ.ஜி.சி) துணைத்தலைவர் வேதிபிரகாசு பேசியதாவது: நாம் திறமையை நாம் உணர்வு செயல்பட வேண்டும். தனித்தன்மையை கண்டறிந்து வெளிக்கொண்டு வருவதில் கல்வி நிலையங்களில் பங்கு முக்கியமானது. சமுதாயத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது கல்வி நிலையங்கள்தான். உலகப்போருக்குப்பின் வளர்ந்த நாடுகள் கல்விக்கான உரிமை, அனைவருக்கும் கட்டாயக்கல்வியை நிலைநாட்டியது.இந்தியாவில் 527 பல்கலைக் கழகங்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. கல்வி நிலையங்கள் புத்தகத்தில் உள்ளவற்றை மட்டும் கற்பிக்காமல் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து, திறமை மிக்கவர்களாக உருவாக்க வேண்டும். இந்தியா வளர்ந்து வரும் நாடு என்றாலும் பீகார், உத்திரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கல்வி அறிவு பெற்றோர் குறைவாக உள்ளனர். நாட்டில் ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 20 கோடிப்பேர் கல்வி பயின்றாலும் 52 சதவீதம் பேர்தான் உயர்கல்வி படிக்கின்றனர். பள்ளிக்கல்வியில் அடிப்படைக்கல்வியை வளப்படுத்த வேண்டும். கல்வி மனிதவளத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். தற்போது நாம் படிக்கும் கல்வி பல ஆண்டுகளுக்கு முன் வகுக்கப்பட்டது. கல்வி சமூக நீதியை போதிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அனைவருக்கும் அக்கரை உள்ளதை கல்வி வலியுறுத்த வேண்டும்.நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் உருவாக காரணம் நாமே. சமுதாயத்தையும், நாட்டையும் வழிநடத்திச் செல்வது மக்களின் கையில் உள்ளது. கிராமப்புறத்தைவிட நகர்புறங்களில் வளர்ச்சி வேகமாக உள்ளது. வளர்ச்சி பரவலாக்கப்பட வேண்டும். கல்வி நிலையம், பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தாய்மொழியில் கல்வி, ஆராய்ச்சி செயல்பட வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகம், அங்குள்ள துறைகள் அப்பகுதியில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி போதித்து சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கை உயரும். கிராமத்தின் வளர்ச்சிதான் நாட்டில் சீரான வளர்ச்சியை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.ஆசிய வளர்ச்சி வங்கி முன்னாள் இயக்குனர் சுப்பிரமணியன், பேராசிரியர் ஜோசப் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: