அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை

அண்ணா பல்கலையில் இந்த ஆண்டு முதல் துவக்கம்:

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, புதிதாக அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக் கழகம், பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் பொறுப்பையும் கவனித்து வந்தது. அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் பொறுப்பை கவனிக்க சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலை துவக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகம் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நூற்றாண்டை முன்னிட்டு, "அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை' என்ற பெயரில் புதிய ஆராய்ச்சி உதவித்தொகை உருவாக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இந்த கல்வியாண்டு முதல் ஆண்டுதோறும் 45 ஆராய்ச்சி மாணவர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும். முழுநேர பிஎச்.டி., ஆராய்ச்சியில் சேரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். அறிவியல், தொழில்நுட்பம், ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங், அறிவியல் மற்றும் கலை, மேலாண்மை அறிவியல் ஆகிய பாடங்களில் இந்த ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆராய்ச்சி உதவித்தொகையை பெறத் தகுதிபெறும் மாணவர்கள், மாதந்தோறும் 12 ஆயிரம் ரூபாயும், வருடாந்திர சிறப்பு நிதியாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு அல்லது ஆராய்ச்சி அறிக்கை தாக்கல் செய்யும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். மொத்தம் வழங்கப்படவுள்ள 45 ஆராய்ச்சி உதவித்தொகைகளில், கிண்டி பொறியியல் கல்லூரிக்கு 16, எம்.ஐ.டி.,க்கு 9, ஏ.சி., டெக்., கல்லூரிக்கு 5, எஸ்.ஏ.பி., கல்லூரிக்கு 2, சிறப்பு மையங்களுக்கு 6 உதவித்தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


 

0 comments: