மாஸ் ரீடிங் புரோகிராம் : ஒரே நேரத்தில் பலரை படிக்க வைக்க குஜராத் அரசு புதுமை நிகழ்ச்சி

ஆமதாபாத்: புத்தகம் படிக்கும் எண்ணத்தை வளர்க்கும் விதமாக ஒரு நாளில் ஒரே நேரத்தில் 50 லட்சம் பேரை படிக்க வைக்கும் புதுமை நிகழ்ச்சிக்கு குஜராத் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. முதல்வர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.


புதுமைத்திட்டங்களை புகுத்துவதில் நல்லதொரு பெயர் பெற்ற மோடிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சமீபத்திய பஞ்சாயத்து தேர்தல்கள் வெற்றிகள் அமைந்திருந்தன. 3 முறை முதல்வராக பதவியேற்றதில் இவரது அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சிப்பணிகளையும் செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


பொருளதார வளர்ச்சியும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இவரது ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் முக்கியமானவை வருமாறு:


கிரிஷி மகோத்சவ் ( விவசாய நிலங்கள் ஆய்வுப்பண்ணை), சிரஞ்சீவி யோஜனா ( குழந்தைகள் இறப்பை குறைக்க நலத்திட்டம் ) , ஜோதிகிராம் யோஜனா (மின்சாரம் வழங்கி இருள் இல்லாத கிராமங்கள் உருவாக்குதல் ), மற்றும் பெண்கல்விக்கு முக்கியத்துவம், பெண்குற்றத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் திட்டம் என பல அடங்கும்.


இந்நிலையில் மக்கள் இடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு புதிய முயற்சி மேற்கொண்டிருக்கிறது, இந்த மாநில அரசு.


இதன் படி இன்று ஒரு மணி நேரம் அனைவரும் புத்தகமும் கையுமாக இருக்க மாஸ் ரீடிங் புரோகிராம் ( வஞ்சே குஜராத் - ரீட் குஜராத் என்ற பெயரில் ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பள்ளிகள், கல்லூரிகள், பார்க்குகள், பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே புத்தகங்கள், நாழிதழ்கள் விநியோகிக்கப்பட்டு படிக்க செய்ய வைக்கப்படுகிறது.


இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு சாதனையாக அமையும் என மாநில கல்வித்துறை முதன்மை செயலர் ஹஸ்முக்ஆதித்யா கூறியுள்ளார்.


மக்களிடம் படிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

0 comments: