தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி?


தூத்துக்குடி: தீபாவளி பண்டிகை தீ விபத்தில்லா பண்டிகையாக இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை தூத்துக்குடி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது; பெரியவர்களின் மேற்பார்வையில் தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். ஓரிரு வாளிகள் நிறைய தண்ணீர், மணல் தயாராக வைத்திருக்க வேண்டும். நீண்ட ஊதுபத்திகள் உபயோகித்து பக்கவாட்டில் பட்டாசுகள் வெடிப்பது நல்லது. அவ்வாறு செய்யும்போது முகத்தை வேறுபக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். எரிந்து முடிந்த பட்டாசு, கம்பிமத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளிகள் அல்லது உலர்ந்த மண்ணில் முக்கவேண்டும். வெடிக்காத பட்டாசுகைள கையில் எடுக்க கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகளின் மாடியில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. சிறு குழந்தைகள் அபாயகரமான பட்டாசுகளை வெடிக்ககூடாது.


பூந்தொட்டி, சங்குசக்கரம், ராக்கெட் பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்க கூடாது. சிம்னி இல்லாத விளக்குகள் மூலம் பட்டாசு வெடிக்க கூடாது. கம்பிமத்தாப்புகளை தள்ளிநின்று எரியவிட வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும் போது நைலான், சில்க் துணிகளை தவிர்த்துவிட்டு, பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டு காலை 6 மணி முதல் இரவு 10 மணி முடிய பட்டாசுகளை வெடிக்கலாம். பட்டாசு கடைகள், கேஸ் கிடங்குகள், உணவுப்பொருள் சேமிப்பு கிடங்குகள், வைக்கோல் போர், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்க், மின்சார டிரான்ஸ்பார்மர், மார்க்கெட், குடிசைகள் அருகில் வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது. பரந்த மைதானத்தில் வைத்து தான் ராக்கெட்டுகளை வெடிக்க வேண்டும். ஆடையில் தீப்பற்றினால் ஓடாமல் தரையில் படுத்து உருளவேண்டும். தீப்புண்கள் ஏற்பட்டால் குளிர்ந்த நீர்ஊற்றி மெல்லியதுணியால் மூடி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அழுத்தி துடைக்ககூடாது, புண்களின் மீது இங்க், ஆயில் போன்றவற்றை ஊற்றக்கூடாது. உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் 100 மற்றும் 101 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 comments: