விடா முயற்சியுடன் கூடிய பயிற்சி தேவை : பெரியார் பல்கலை துணை வேந்தர் பேச்சு

ஓசூர்: ""விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சிதான் மாணவர்களை முழு மனிதனாக்குகிறது, '' என, ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலை துணை வேந்தர் முத்துசெழியன் பேசினார். ஓசூர் எம்.ஜி.ஆர்., நகர் எம்.ஜி.ஆர்., கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.


பெரியார் பல்கலை துணை வேந்தர் முத்துசெழியன், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதவாது: இன்றைய போட்டி நிறைந்த உலகில் வெறும் பட்டங்கள் மட்டும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு போதாது. படிப்புடன் கூடிய தனித்திறமைகள் உடனடியாக வேலைவாய்ப்புகளை பெற்று தரும். தனித்திறமைகளை பயிற்சியின் வாயிலாக பெற முடியும். விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சிதான் மாணவர்களை முழு மனிதனாக்குகிறது.பத்திரிக்கைகளை தினம் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும். கல்லூரி காலம் மாணவர்களுக்கு வாழ்க்கையில் முக்கிய தருனமாக விளங்குகிறது. இளநிலை படிப்புடன் கல்வியை முடித்து கொள்ளாமல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் தொடர வேண்டும்.


நமது நாட்டின் கல்வி தரம் உயருவதோடு, புதிய கண்டுபிடிப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளது. பள்ளி கல்வியில் 99 சதவவீதம் மதிப்பெண்ணும், கல்லூரி படிப்பில் 89 சதவீதம் மதிப்பெண் பெறுவதோடு வாழ்க்கை முடிவதில்லை. இந்த மதிப்பெண் விரும்பிய துறைகளை தேர்வு செய்வதற்கு மட்டும் உதவுகிறது. கல்லூரி படிப்பு தான் மாணவர்களுக்கு வாழ்க்கையின் துவக்கமாகிறது.கல்லூரி நாளில் படிப்பது விளையாட்டு, கலைத்திறன், பேச்சு, எழுத்து உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வளர்த்துகொள்ள வாய்ப்பு உள்ளது. வழிகாட்டுவதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் துணையாக இருப்பர். அதனால், அப்போது தொடர் பயிற்சியின் மூலம் தனித்திறமைகளை வளர்த்து கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் சாதிக்க முடியும்.


கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற குறிக்கோளை நிர்ணயித்து அதை நோக்கி பயணம் செய்கின்றனர். அதன்பின் தனித்திறமைகளை வளர்த்து கொள்ளவோ, வெளிப்படுத்தவோ வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகிறது.அதனால், கல்லூரி வாழ்க்கையில் குறிக்கோள்களை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்கு முழுமுயற்சிகளையும், தனித்திறமைகளையும் மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.எம்.ஜி.ஆர்., கல்லூரி மற்றும் அதியமான் கல்வி ஆராய்ச்சி நிறுவன சேர்மன் டாக்டர் பானுமதி தலைமை வகித்தார். அதியமான் இன்ஜினிரிங் கல்லூரி முதல்வர் ரங்கநாத் வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் முத்துமணி வரவேற்றார்.

 

0 comments: