மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைந்தால் பார்வை குறைபாடு நிச்சயம்

ஊட்டி : "பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச் சத்து குறைவு காரணமாக பார்வை குறைபாடு ஏற்படுவதால், வைட்டமின் நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்,' என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக பார்வை தினத்தை கண் நல கருத்தரங்கினை நடத்தின.


கண் நலம் குறித்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் அமராவதி ராஜன் பேசியதாவது: உலக அளவில் 180 மில்லியன் மக்கள் கண் பார்வை குறைபாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 45 சதவீதத்தினர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 முதல் 20 சதவீதத்தினருக்கு கண்புரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வங்கி உதவியுடன் தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் கிராமங்களில் இலவச கண் சிகிசை முகாம்கள் நடத்தி இலவச அறுவை சிகிச்சை செய்து தரப்படுகிறது.


தற்போது பள்ளி மாணவர்களுக்கு உரிய ஊட்டச்சத்து குறைவு காரணமாக பார்வை குறைபாடு உள்ளது. இதனால், தமிழக அரசு இலவச கண் கண்ணாடிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பயன்பெறலாம். பார்வை குறைபாடு உடையவர்கள் மற்றவர்கள் ஊட்டச்சத்து பெற மக்கள் பழங்கள், கேரட், மீன் போன்ற வைட்டமின் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். கருவிழி பாதிப்புகளில் 7 சதவீதம் விபத்து மூலம் ஏற்படுகிறது. விளையாடும் போது பேனா, ஊசி போன்ற கூர்முனைகள் கொண்ட பொருட்கள் பயன்படுத்துவதால் கண் பாதிக்கப்படுகிறது.


வெளிநாடுகளில் பார்வை குறைபாடு மிகவும் குறைவாக உள்ளது. நமது நாட்டில் அதிகமாக உள்ளது. கண்ணில் ஏற்படும் குறைகளுக்கு தாய்பால், விளக்கெண்ணெய் போடுவது வேறு பாதிப்பை உருவாக்கும் என்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அமராவதி ராஜன் கூறினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன் பேசுகையில், ""கருவிழி பாதித்தோருக்கு கண்தானம் மூலம் பார்வை பெற செய்ய முடியும். கண்தானம் செய்ய மாணவர்கள் முன் வருவதோடு மற்றவர்களையும் கண்தானம் செய்ய பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.


உதவி தலைமையாசிரியர் சாமுவேல் பிரபாகரன் பேசுகையில், ""நான் கண்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு கண்தானம் மூலம் பயன் பெற்று பார்வை பெற்றுள்ளேன். எனக்கு பார்வை கொடுத்தவர் கடவுளாக தெரிகிறார். அதுபோல அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும். தீபாவளி போன்ற விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல், விளையாட்டு நேரங்களில் கண்ணை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். ரசாயன உணவுகளை தவிர்த்து சத்தான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.


பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ருக்மணி தலைமை வகித்தார். தொழிற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் மங்கை, ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன், பள்ளி ஆசிரியர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பார்வை இழப்பு தடுப்பு சங்க ஸ்ரீதர், பள்ளி ஆசிரியர் சிவராஜ் சிவபுத்ரா, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

 

0 comments: