மனக்குறை உள்ளவர்கள் தான் ஊனமுற்றோர் : முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் கார்த்திகேயன்.

சேலம்: திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சுரண்டிக் கொள்கின்றனர். நாட்டில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுவதை படித்து தெரிந்து கொள்ளும் மக்கள் தீவிரவாத செயல்களில் இறங்குகின்றனர் என சேலத்தில் முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் கார்த்திகேயன் பேசினார்.சேலம் அரிமா அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, ஐந்து ரோடு கோகுலம் அரங்கில் நேற்று நடந்தது.

முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் கார்த்திகேயன் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் 50 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்தான் வாழ்கின்றனர். மீதமுள்ள 50 சதவீதம் பேர் வறுமையில் தவிக்கும் மக்களை தத்தெடுத்து அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். மனிதர்களுக்கு உடல் குறை என்பது ஊனமல்ல, மனக்குறையோடு வாழ்பவர்கள்தான் ஊனமானவர்கள்.ஏழையாய் பிறந்து விட்டோமே என்று யாரும் கவலைப்படக்கூடாது. மனதில் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். லஞ்சம் வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும்.மக்கள் திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் திருடிக் கொள்கின்றனர். லஞ்சம், ஊழல் ஒழிக்கப்படவில்லையென்றால் எவ்வளவு போலீஸ், ராணுவம் வந்தாலும் தீவிரவாதம் தலைதூக்கிக் கொண்டேதான் இருக்கும். எங்கு நியாயம் உள்ளதோ அங்குதான் அமைதி திகழும்.

இந்தியா இளைஞர்களை நம்பி உள்ளது. எது அவசியமோ அதை செய்யுங்கள். மற்றவர்கள் அப்படியிருக்கிறார்களே என எண்ணி செயல்படாதீர்கள். உயர்ந்த எண்ணமும், எளிமையான வாழ்க்கையும்தான் ஒருவரை உயர்த்தும். இல்லாதவர்களுக்கு சேவை செய்வது தான் சிறந்த சேவை. சமுதாய சேவை மூலமே உண்மையான திருப்தி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 130 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார்.போலீஸ் கமிஷனர் சுனில்குமார்சிங், லயன்ஸ் அறக்கட்டளை தலைவர் அரவிந்த்ராஜ், கோகுலம் மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி, ஐ.ஓ.பி., துணை பொதுமேலாளர் காந்திமதி மற்றும் நிர்வாகிகள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

0 comments: