விட்டுக்கொடுத்தால் வாழ்வில் வெற்றி

பெரம்பலூர்: ""விட்டு கொடுத்து வாழ்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்,'' என தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தெரிவித்தார். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில், "வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கம் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது. கருத்தரங்கத்துக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, சேகர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது: எய்ட்ஸ் நோயாளிகள் அதிகளவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளனர். இதற்கு காரணம் அங்கு லாரி டிரைவர், கூலித்தொழிலாளிகள் அதிகம். மனைவிகளைப் பிரிந்து வாழ்வதால் இதுபோன்ற நோய்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். எய்ட்ஸ் நோயால் குடும்பத்தலைவர் இறந்துவிட்டால் அந்த குடும்பமே பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. மனிதர்களாகிய நாம் பகுத்தறிவை பயன்படுத்தி எந்த செயலையும் செய்ய வேண்டும். தமிழர் பண்பாடுகளை மீறக்கூடாது. உங்களது எண்ணங்கள் உயர்ந்த எண்ணங்களாக இருக்க வேண்டும்.
எண்ணங்கள் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். விட்டு கொடுக்கும் எண்ணம் உள்ளவர்கள் கெட்டுப்போவதில்லை. எனவே, விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். பெண்களுக்கு இளகிய மனசு இருக்க வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தார்போல தங்களை மாற்றிக்கொண்டால் வாழ்வில் உயர்வு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில், டாக்டர் இளங்கோவன், ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட மேலாளர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் புனிதலட்சுமி வரவேற்றார். துணை முதல்வர் ராணி நன்றி கூறினார்.

 

0 comments: