எதிர்கால இந்தியா ஆசிரியர் கையில் உள்ளது

திருச்செங்கோடு ""எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் உள்ளது,'' என, பள்ளி விழாவில், எம்.பி., செல்வகணபதி பேசினார். திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தொன்மை பாதுகாப்பு மன்றத்துவக்க விழா நடந்தது. சி.இ.ஓ., மல்லிகா தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கண்ணையன் வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் முரசொலி முத்து, உறுப்பினர் தாண்டவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


எம்.பி., செல்வகணபதி மன்றத்தை துவக்கி வைத்து பேசியதாவது: அரசு பள்ளியில் படிப்பதை தாழ்வாக கருதக் கூடாது. உயர்ந்த நிலையில் உள்ள தலைவர்கள், மேதைகள், அறிஞர்கள், அதிகாரிகள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான். குதிரைகளை குதிரைகளாகவே உருவாக்கும் வேலையைத்தான் தனியார் பள்ளிகள் செய்கின்றன. குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை சிறந்த திறமையாளர்களாக உருவாக்கும் பணியை அரசு பள்ளிகள் செய்கின்றன. அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்குதான் வாழ்க்கை மற்றும் வறுமை தெரியும். போர் குணமும், போராட்ட உணர்வும் மிகுந்த மாணவர்கள் அரசு பள்ளிகளில்தான் உருவாகின்றனர்.


குழந்தைகளை சுதந்திரமாக வளர விட வேண்டும். கட்டுப்பாடுகளை விதித்து கசக்கி பிழியக் கூடாது. மனப்பாடம் செய்வதை விட புரிந்து படிக்கும் திறனை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். வளரும் சூழ்நிலை வாழ்க்கை பாதையை மாற்றிவிடும். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களை ரோபோக்களை போல் கையாளும் நிலை தான் நடைமுறையில் உள்ளது. எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கைகளில்தான் உள்ளது. தாழ்வு மனப்பான்மை இல்லாமல், திட்டமிட்டு கடுமையாக உழைத்தால் எதிலும் வெற்றி பெறலாம். நான் படித்த பள்ளியில் 500 பேர் அமரும் வகையில் கலையரங்கம் கட்ட எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, ஒன்றரை ஆண்டுகளுக்குள் கட்டித்தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தலைமையாசிரியர் கண்ணையன், ஆசிரியர்கள் செந்தில்குமார், தமிழரசி, பாக்யலட்சுமி, செல்ரவாசு, கனகராஜ், ராஜேஸ்வரி, தமிழ்மணி ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: