30 வயதுக்கு மேற்பட்டவர்களக்கு சிகிச்சை "நலமான தமிழக' திட்டம் நவ.1ல் துவக்கம்

திண்டுக்கல்: கிராமங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்க மார்க் வழங்கும் "நலமான தமிழகம்' திட்டம் நவ.1ல் துவங்குகிறது. தமிழக கிராமப்புறங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை, இருதயம், ரத்த அழுத்தம் ஆகியவற்றை அறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு "நலமான தமிழகம்' என பெயரிடப்பட்டுள்ளது. வரும் நவ.1 முதல் கிராமங்களில் பள்ளிகள், சத்துணவு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நூலகங்கள், பஞ்சாயத்து அலுவலகங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடல் ரீதியாக பரிசோதனை நடக்கிறது. வயது, இடுப்பளவு, உடல் எடை, உயரம், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, புகைபிடித்தல், மது குடித்தல், போதை பொருள் பழக்கம் உள்ளதா, பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளதா, சம்பந்தப்பட்டவர் பார்க்கும் வேலை கடினமானதா, எளிதானதா என்பது குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. பின்னர் இதற்கு மார்க் வழங்கப்படும். நூற்றுக்கு 70 மார்க் எடுத்தவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், 30 மார்க் எடுத்தவர்கள் நோயாளிகளாகவும் கருதப்படுவர். 30 மார்க் எடுத்தவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். பயிற்சி: தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், கிராமநல தன்னார்வ தொண்டர்கள் ஆகியோருக்கு நோயாளிகளை கண்டுபிடிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 50 வீடுகளுக்கு ஒரு கிராம நல தன்னார்வ தொண்டர் நியமிக்கப்படுவார். இவர்கள் 50 வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை கண்காணித்து சிகிச்சை அளிப்பர். இதுதொடர்பான முகாம் வரும் 1ல் துவங்கி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடக்கிறது.

 

0 comments: