பல்வேறு நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருவேங்கடம் : காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றுபோக்கு போன்ற நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுமக்கள் கண்டிப்பாக பயன்படுத்திட வேண்டும் என குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சாதாரண காய்க்சல் அறிகுறிகள்: தலைவலி, உடல் வலியுடன் காய்ச்சல், சளி, இருமல் இவற்றுடன் ஒருசில நபர்களுக்கு வாந்தியும் ஏற்படலாம். இவை கொசுக்களினால் பரவுகின்றன. வீட்டிற்கு வெளியே கிடக்கும் உபயோகமற்ற டப்பா, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள், மண்பாண்ட துண்டுகள், சிரட்டைகள், தேங்காய் நுங்கு மட்டைகள், ஆட்டு உரல் போன்றவைகளில் மழைநீர் தேங்கி இருந்தால் கொசு உற்பத்தியாக ஏதுவாக இருக்கும். எனவே இவைகளை அப்புறப்படுத்த வேண்டும். மேல்நிலை தொட்டி, தரைநீர் தொட்டி, டிரம்களில் 3 தினங்களுக்குமேல் தண்ணீர் தேக்கம் செய்யக்கூடாது.


மலேரியா காய்ச்சல் அறிகுறிகள்: குளிர் மற்றும் நடுக்கத்துடன் விட்டு விட்டு வரக்கூடிய காய்ச்சல். தலைவலி, முதுகுவலி, உடம்பு நெருப்பாக கொதிக்கும். அதிக வியர்வை காணப்படும். இது அனாமலஸ் என்ற பெண் கொசுவினால் பரவுகிறது. இதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக ரத்த பரிசோதனையும் சிகிச்சையும் செய்யப்படும்.


பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, உடல்வலி, இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியன இதன் அறிகுறியாகும். இந்நோய் கிருமி காற்றின் மூலமும், நோய் கண்டவர்கள் தொடும் பொருட்களின் மூலமும் மாற்றவர்களுக்கு பரவும். இதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் 5 வயதிற்குட்பட்டவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், நீண்டகால உடல்நிலை குறைவு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள்.


நோய் தடுப்பு முறை: நோயாளிகள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சத்தான உணவு, ஓய்வு எடுத்தல், கூட்டமாக உள்ள இடத்திற்கு செல்லக்கூடாது.


நோய் தடுப்பு முறை மற்றவர்கள்: இருமல், தும்மல், வரும் போது கைக்குட்டையை பயன்படுத்தவும். பொது இடங்களில் எச்சில் துப்பாமை. தடுப்பு மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி போட வேண்டும். காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும். வாந்தி, வயிற்றுப் போக்கை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

0 comments: