மக்கள் தொகை பெருகினால் பாதிப்பு அதிகரிக்கும்

பந்தலூர் : "மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து கொள்ள இளைய சமுதாயத்தினர் முன்வர வேண்டும்,' என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடும்ப நலத்துறை, பொது சுகாதாரத்துறை இணைந்து கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக மக்கள் தொகை தின விழா கருத்தரங்கை கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் பேசுகையில்,""மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை மாணவர்கள் மத்தியில் வெளிப்படுத்தும் வகையில் உலக மக்கள் தொகை தின விழா கருத்தரங்கம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் தங்கவேல் பேசுகையில், ""மக்கள் தொகை பெருக்கம் அதிகரிப்பால் நிலங்களின் தன்மை மாறி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பின்னர் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு மத்தியில், மக்கள் பெருக்கத்தால் வனவளம் அழிந்து சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது.


நகர்புறங்களில் தூய்மையான காற்று, சுகாதாரமான தண்ணீர் போன்றவை கிடைக்காத நிலையில் தற்போது அதே நிலை மெல்ல, மெல்ல கிராமப்புறங்களிலும் ஏற்பட்டு வருகிறது. எனவே, மக்கள் தொகை பெருக்கத்தை குறைத்து வளமுடன் வாழ முன்வரவேண்டும்,'' என்றார்.


பள்ளி தலைமையாசிரியர் வினோத் பேசுகையில், ""மக்கள் தொகை பெருக்கத்தால் குடும்ப சூழலில் பல்வேறு பிரச்னைகள் எழுகிறது. அளவான குடும்பத்தில் குழந்தைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, கவனிப்புகள் அதிகரிக்கிறது. கூடுதல் குழந்தைகள் உள்ள குடும்பங்களில் தேவைகள் அதிகரித்து, அதுவே குடும்பத்தில் தொடரும் பிரச்னைகளுக்கு காரணமாகி விடுகிறது. நாளைய இளைய சமுதாயமான மாணவர்கள் மத்தியில் மக்கள் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை கொண்டு செல்லும் முயற்சி நல்ல பயனை தரும்,'' என்றார்.


ஆசிரியர் செந்தில்குமார் பேசுகையில், ""உலக வெப்பமயமாதலுக்கு மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணமாகும். மக்களின் எண்ணிக்கை பெருகுவதால் குடியிருப்புகள் அமைக்க நிலம் தேவைப்படுவதால் புல்வெளிகள் மற்றும் வனங்கள் அழிக்கப்படுகிறது. அதிகளவில் தொழிற்சாலைகள் உருவாகிறது. இதுபோன்ற நிலைகளால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு, காலநிலையில் மாற்றம், பல்வேறு நோய்களால் பாதிப்பு என பெருகி வரும் மக்கள் தொகையே மக்கள் தொகை குறையவும் வாய்ப்பாக அமைகிறது,'' என்றார்.


டாக்டர் கதிரவன் தலைமை வகித்து பேசுகையில், ""மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க குடும்ப நலத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும், மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு என மக்கள் தொகை பெருக்கத்தால் பல்வேறு பிரச்னைகள் நாளுக்கு நாள் தலைதூக்கி வருகிறது.


இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலத்தின் தூண்கள் என்பதால் மாணவர்கள் மத்தியில் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. முதலிடம் வகிக்கும் சீனாவில் பல்வேறு நடைமுறைகள் மூலம் மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. ஆனால் அந்த இடத்தை இந்தியா பிடித்துவிடுமோ என்ற நிலைக்கு மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.


மக்கள் தொகையினை குறைத்தால் நல்ல வளமுள்ள நாடாக இந்தியாவை மாற்ற இயலும். மாறாக மக்கள் தொகை பெருக்கத்தால் வளம் அனைத்தும் வெகுவாக குறைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனை மாணவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கனகசிவம், முகமது பாரூக், செவிலியர்கள் சில்வஸ்டி, சுப்புலட்சுமி, ராமாயி, வசந்தி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். செவிலியர் பார்வதி நன்றி கூறினார்.

 

0 comments: