"தமிழ், ஆங்கில பாடங்களை முழுமையாக வாசிக்க மாணவர்க்கு பயிற்சி அளிக்க வேண்டும்'

உடுமலை: "தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நடத்திய பிறகு மாணவர்களுக்கு அதனை முழுமையாக வாசிக்க பயிற்சி அளிக்க வேண்டும்,' என உடுமலையில் நடந்த தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில், கடந்த ஆண்டு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்தும், நடப்பு கல்வியாண்டில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போது நடந்துள்ள காலாண்டுத்தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டு, கூடுதல் மதிப்பெண் பெற்று மாணவர்களை வெற்றி பெற செய்வது குறித்து விளக்கப்பட்டது. பள்ளிகளில் யோகா பயிற்சி நடைபெறும் விவரம் குறித்து கேட்டறியப்பட்டதுடன், யோகா பயிற்சியினை தலைமையாசிரியர்கள் மேற்பார்வையிடவும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளி வளர் இளம் பருவம் கல்வித்திட்டத்தின் கீழ் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 16 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தி முடிக்க செயல்திட்டம் குறித்தும் கூறப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில், பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சி நடத்தி, அதற்குரிய செய்முறைப் பதிவேடுகள் மாணவர்களால் பாதுகாக்க வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளுக்கென தனியாக அறிவியல் ஆய்வகம் பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் பெறக்கூடிய அனைத்து அறிவியல் உபகரணங்களும் பள்ளியில் இருப்பு பதிவேட்டில் பதியப்படுவதுடன் பள்ளியின் ஆய்வகத்தில் செய்முறையில் அறிவியல் உபகரணங்கள் பயன் படுத்தப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில அகராதிகள் பயன்படுத்துவதற்கு தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஆங்கில ஆசிரியர்கள் வகுப்பிற்கு சென்றவுடன் 5 நிமிடம் ஆங்கில அகராதி சார்பான வகுப்புகள் நடத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரை கணிதபாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் வாய்ப்பாட்டினை கற்றுக்கொடுக்க வேண்டும். 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு மணக்கணக்கு பயிற்சி உரிய முறையில் கற்பிக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நடத்திய பிறகு மாணவர்களுக்கு அதனை முழுமையாக வாசிக்க பயிற்சி அளிக்க வேண்டும். 6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையில், கற்றல், கற்பித்தல் முறையும், 9ம் வகுப்பிற்கு ஏஎல்எம்., ப்ளஸ் கற்றல் கற்பித்தல் முறையையும் நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் குறைந்தது வாரத்திற்கு 10 பாடவேளைகளில் வகுப்பு எடுக்க வேண்டும். தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் கலை மன்றங்களில் செயல்பாடுகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாதுகாக்கும் பொருட்டு தொன்மை மன்றங்கள் துவங்குதல் குறித்து விளக்கப்பட்டது. பள்ளிகளில் கட்டடம் விவரம், இலவச சைக்கிள் தேவைப்பட்டியல் அனுப்பப்பட்டது.

 

0 comments: