தமிழக பல்கலைகள் இடையே ஒப்பந்தம் : சென்னை பல்கலைக் கழகம் திட்டம்

http://img.dinamalar.com/data/large/large_117020.jpg

சென்னை : ""ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளை இணைத்து ஆராய்ச்சி மேற்கொள்வது தொடர்பாக, மருத்துவம், சட்டம், வேளாண்மை, பொறியியல், கால்நடை மருத்துவம் ஆகிய, தமிழக பல்கலைக்கழகங்களுடன் சென்னை பல்கலை ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது,'' என, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.


சென்னை பல்கலைக்கழக சென்ட் கூட்டம் துணைவேந்தர் திருவாசகம் தலைமையில் நேற்று நடந்தது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் பாடப்பிரிவுகளுக்கு பல்கலை இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தியதற்கும், ஆண்டுதோறும் புதுப்பித்தல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியதற்கும் செனட் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


கூட்டத்தில் பேசிய துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழகம் பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, ஆராய்ச்சி, மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றம் ஆகிய பணிகளில் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், நம்நாட்டிலேயே பல்வேறு வசதிகள் உள்ளன. அவற்றை நாம் முதலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக தமிழகத்தில் உள்ள சட்டம், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் சென்னை பல்கலை ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம், சென்னை பல்கலை மாணவர்கள் இதர பல்கலைகளில் உள்ள வசதிகளையும், ஆராய்ச்சி உபகரணங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இதர பல்கலை மாணவர்கள் சென்னை பல்கலையில் 35 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட நானோ டெக்னாலஜி உபகரணங்கள் உள்ளிட்ட ஆராய்ச்சி உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளை இணைந்து, ஆராய்ச்சி மேற்கொள்ள உதவியாக இருக்கும். இது தொடர்பாக தமிழக பல்கலை துணைவேந்தர்களுடன் பேச உள்ளேன். இன்னும் ஒரு மாதத்தில் தமிழக பல்கலைகள் மற்றும் சென்னை பல்கலை இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். எதிர் காலத்தில் மற்ற பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகளை, சென்னை பல்கலை மாணவர்கள் விருப்பப் பாடமாக தேர்வு செய்யவும் முடியும். சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனத்தில், தமிழக அரசு பிறப்பித்துள்ள "200 பாயின்ட் ரோஸ்டர்' முறை பின்பற்றப்படும். பல்கலையில் உள்ள ஒவ்வொரு துறையும் ஒரு தனிப்பிரிவாக கருதப்பட்டு, இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்படும். சென்னை பல்கலையில் ஒவ்வொரு ஆசிரியருக்கு, ஒரு மாணவராவது ஆராய்ச்சி உதவித்தொகை பெறும் வகையில் ஆராய்ச்சி உதவித்தொகையின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு திருவாசகம் தெரிவித்தார்.

 

0 comments: